ஆப்நகரம்

ஓபிசி இடஒதுக்கீட்டால் பயனடைந்தவர்கள் யார்? அரசு அதிர்ச்சி தகவல்!

ஓபிசி பிரிவில் வெறும் 1 விழுக்காட்டினர் மட்டும் 50 விழுக்காடு இடஒதுக்கீட்டு பயன்களை அனுபவிப்பதாக அரசு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

Samayam Tamil 11 Jul 2020, 6:51 pm
ஓபிசி பிரிவில் ஆயிரக்கணக்கான சமூகங்கள், ஜாதிகள் இருக்கின்றன. ஓபிசி பிரிவினருக்கு அரசு வேலைவாய்ப்புகளிலும், கல்வி நிறுவனங்களிலும் 27% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஓபிசி பிரிவினருக்குள் இடஒதுக்கீட்டு பயன்கள் சீராக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
Samayam Tamil இடஒதுக்கீடு


ஓபிசி இடஒதுக்கீடு பகிர்வு, உட்பிரிவுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக 2017ஆம் ஆண்டில், ஓய்வுபெற்ற டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ரோகிணி தலைமையில் மத்திய அரசு குழு அமைத்தது. இந்த குழுவின் ஆய்வு முடிவுகள் தி பிரிண்ட் ஊடகத்திற்கு கிடைத்துள்ளது.

இந்த ஆய்வின்படி, ஒட்டுமொத்த ஓபிசி பிரிவில் உள்ள சுமார் 6,000 சமூகங்களில் வெறும் 40 சமூகங்கள் மட்டும் மொத்த இடஒதுக்கீட்டில் 50 விழுக்காட்டை அனுபவித்துள்ளதாக தெரிகிறது. அதாவது, ஒட்டுமொத்த ஓபிசி பிரிவினரில் 1 விழுக்காட்டினர் மட்டும் 50% இடஒதுக்கீட்டு பலன்களை அனுபவித்துள்ளனர்.

இதில் மத்திய கல்வி நிறுவனங்கள், மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பெற்ற இடஒதுக்கீட்டு பலன்கள் மட்டுமே அடங்கும். இந்த ஆய்வு முடிவுகளின்படி, 2014ஆம் ஆண்டுக்கும் 2018ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஐஐடியில் ஓபிசி பிரிவை சேர்ந்த 13,000 பேர் சேர்ந்துள்ளனர். ஐஐஎம்களில் 3,000க்கும் மேற்பட்டோர் சேர்ந்துள்ளனர். இதர மத்திய பல்கலைக்கழகங்களில் 60,000க்கும் மேற்பட்டோர் சேர்ந்துள்ளனர்.

சுமார் 20% ஓபிசி சமூகங்கள் இடஒதுக்கீட்டில் எந்த பயனுமே அனுபவிக்கவில்லை என இந்த அறிக்கை கூறுகிறது. இத்தகவல்கள் அனைத்தும் 2018ஆம் ஆண்டு வரை திரட்டி சேகரிக்கப்பட்டவை என குழு உறுப்பினர் ஜே.கே.பஜாஜ் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி