ஆப்நகரம்

Year Ender: ரேஷன் கார்டில் இலவச உணவு.. சிறப்பாகச் செயல்பட்ட மத்திய அரசு!

ரேஷன் அட்டைதாரர்களுக்கும் விவசாயிகளுக்கும் இந்த ஆண்டில் அரசு வழங்கிய நலத்திட்ட உதவிகள் மற்றும் திட்டங்கள் குறித்த தொகுப்பு..!

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 13 Dec 2022, 3:13 pm
நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இவற்றில் ஏழைகளுக்கான இலவச ரேஷன் திட்டம் மிக முக்கியமான ஒன்றாகும். கொரோனா பிரச்சினை வந்த சமயத்தில் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை (PMGKAY) மத்திய அரசு அமல்படுத்தியது. இத்திட்டம் 2022 டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது.
Samayam Tamil year ender


இந்தத் திட்டத்தின் மூலம், அரசாங்கம் கோடிக்கணக்கான ஏழைகளுக்கு இலவசமாக உணவு தானியங்களை வழங்கி வருகிறது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ், சுமார் 80 கோடி ஏழை மக்களுக்கு ஒரு நபருக்கு கூடுதலாக ஐந்து கிலோ உணவு தானியங்கள் (அரிசி மற்றும் கோதுமை) இலவசமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் இலவச ரேஷன் திட்டம் உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்கள் இந்த ஆண்டில் எவ்வாறு செயல்பட்டுள்ளன என்ற சிறு கண்ணோட்டம் இதோ...

மத்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உணவு மற்றும் பொது விநியோகத் துறை 2022ஆம் ஆண்டிலும் தொடர்ந்து மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. பிரதமரின் ஏழைகளுக்கான பிரதமரின் உணவு தானியத் திட்டம், ஒரே நாடு ஒரே குடும்ப அட்டைத் திட்டம், செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து பயனாளிகளையும் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் உணவு அமைச்சகம் செயல்பட்டுள்ளது. இதுதவிர, உணவு தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டு பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் ஏழைகளுக்கான உணவு தானிய திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 90 ஆயிரத்து 997 கோடி ரூபாய் மதிப்பில் 1118 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தின் மூலம் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் திட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அதற்கேற்ப, உணவு அமைச்சகம் செயல்பட்டு பிரதமரின் ஊட்டச்சத்து திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் திட்டம் உள்ளிட்டவற்றின் கீழ், 17 லட்சத்து 51 ஆயிரம் மெட்ரிக் டன் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்கப்பட்டுள்ளது.

இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பொது விநியோக நடைமுறை சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களிலும் குடும்ப அட்டைகள் 100 சதவீதம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. மாநிலங்களுக்கு இடையேயான மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ள வகை செய்யும் ஒரே தேசம் ஒரே குடும்ப அட்டை திட்டம் 2019ஆம் ஆண்டில் 4 மாநிலங்களில் மட்டுமே நடைமுறையில் இருந்த நிலையில், தற்போது 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அது நடைமுறைக்கு வந்துள்ளது.

2022-23ஆம் ஆண்டு காரிப் பருவத்தில் 04.12.2022 வரை 339.88 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 29 லட்சத்து 98 ஆயிரத்து 790 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக 70 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில், 187.92 லட்சம் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டு 17 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 37ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் குறைந்தபட்ச ஆதரவு விலையாக வழங்கப்பட்டுள்ளது.

நவம்பர் 21ஆம் தேதி வரை கரும்பு விவசாயிகளுக்கு 1 லட்சத்து 49 ஆயிரத்து 81 கோடி ரூபாய் வழங்கப்பட்டு, 97 சதவீத நிலுவை தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2021-22 கரும்பு பருவத்தின் 110 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு ஏற்றுமதி செய்யப்பட்டது. உலகிலேயே முதலாவது பெரிய கரும்பு உற்பத்தி நாடாகவும், இரண்டாவது பெரிய கரும்பு ஏற்றுமதியாளராகவும் இந்தியா உருவெடுத்துள்ளது.

ஆஃப்கானிஸ்தானுக்கு 40 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமையும், திமோர் லெஸ்திக்கு 2 ஆயிரம் மெட்ரிக் டன் பாசுமதி அல்லாத அரிசியும், மொசாம்பிக் நாட்டுக்கு 500 மெட்ரிக் டன் பாசுமதி அல்லாத அரிசியும் மனிதாபிமான உதவியாக இந்தியா வழங்கியுள்ளது. பெட்ரோலில் எத்தனால் கலப்புத் திட்டம் தொடர்பான இலக்கை நோக்கியும் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இது தூய எரிசக்திக்கும், பருவநிலை மாற்றத்தை குறைப்பதற்கும் எரிசக்தி துறையில் இந்தியா சுயசார்பு அடையவும் உதவும் என்று நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்