ஆப்நகரம்

விலைவாசி உயர்வால் விழிபிதுங்கும் இந்தியர்கள்!

ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் பணவீக்கம் மிக அதிகமாக இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 10 May 2022, 1:22 pm
இந்தியர்கள் இப்போது ஒன்றல்ல, இரண்டல்ல, நிறைய பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். திரும்பிய பக்கம் எல்லாம் விலையேற்றம்தான். அரிசி, பருப்பு, எண்ணெய், பால், காய்கறி, பெட்ரோல், தங்கம் என எல்லாப் பொருட்களும் விலை உயர்ந்துள்ளன. இதனால் இல்லத்தரசிகள் பெரும் சிரமத்தில் உள்ளன. குடும்ப வருமானத்தை வைத்து செலவுகளைச் சமாளிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. போதாத குறைக்கு, இந்த நிதியாண்டில் விலைவாசி உயர்வு அதிகமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் சமீபத்தில் கூறியிருந்தார்.
Samayam Tamil inflation


அவர் கூறியது போலவே, நிதியாண்டின் முதல் மாதமே பணவீக்கம் அதிகரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராய்டர்ஸ் ஆய்வறிக்கையில், இந்த ஏப்ரல் மாதத்தில் சில்லறை விற்பனை விலைப் பணவீக்கம் 7.5 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 18 மாதங்களில் இது மிக மோசமான அளவாகும். இந்த அளவுக்கு பணவீக்கம் உயர்ந்தால் அது பொதுமக்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.

தேர்தல் சமயத்தில் பெட்ரோல் - டீசல், சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. ஆனால் தேர்தல் முடிந்த பிறகு விலையேற்றம் தொடங்கியுள்ளது. பணவீக்க விகிதத்தை 4 சதவீதத்திலேயே வைத்திருப்பதுதான் ரிசர்வ் வங்கியின் இலக்கு. 4 சதவீதத்தை விட 2 சதவீதம் கூடவோ குறையவோ செய்யலாம். அதாவது 6 சதவீதம் வரை பணவீக்கம் உயரலாம். ஆனால் அதைத் தாண்டி உயர்ந்தால் நிலைமை கட்டுக்குள் இருக்காது. இதுபோன்ற சூழலில் ராய்டர்ஸ் நிறுவனத்தின் ஆய்வறிக்கை இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

உயரும் விலைவாசி.. எகிறும் EMI.. மக்களின் கண்ணீருக்கு யார் காரணம்?

பணவீக்கம் இந்த அளவுக்கு அதிகரித்தால் அதைக் கட்டுக்குள் கொண்டுவர சில கடுமையான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி ஏற்படுத்த நேரிடலாம். முன்னதாக மார்ச் மாதத்தில் இந்தியாவின் பணவீக்கம் 6.95 சதவீதமாக இருந்தது. ஆனால் ஏப்ரல் மாதத்தில் மேலும் அதிகரித்து நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 2020 அக்டோபர் மாதம் முதலே பணவீக்க பிரச்சினை அதிகமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்