ஆப்நகரம்

தூய்மை இந்தியா திட்டம்.. அனைத்து கிராமங்களிலும் கழிப்பறை வசதி!

இந்தியாவில் சுமார் 50 சதவீத கிராமங்களில் திறந்தவெளியில் மலம் கழிக்காத நிலை உருவாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 10 May 2023, 4:13 pm
கிராமப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் இரண்டாவது கட்ட திட்டத்தின் கீழ் திறந்தவெளியில் மலம் கழிக்காத நிலையை நாட்டின் 50 சதவீத கிராமங்கள் எட்டியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதுவும் தமிழ்நாட்டில் 97.8 சதவீத கிராமங்கள் இந்த நிலையை அடைந்துள்ளது பெரும் வளர்ச்சியைக் காட்டுகிறது.
Samayam Tamil swachh bharat



முதல் மாநிலமாக, தெலங்கானாவின் அனைத்து கிராமங்களும் இந்த வளர்ச்சியை எட்டியுள்ளன. அதைத் தொடர்ந்து, கர்நாடகாவில் 99.5 சதவீத கிராமங்களும், உத்தரப் பிரதேசத்தில் 95.2 சதவீத கிராமங்களும் திறந்தவெளியில் மலம் கழிக்காத நிலைக்கு முன்னேறியுள்ளன.

யூனியன் பிரதேசங்களைப் பொருத்தவரையில், அந்தமான் நிக்கோபார் தீவுகள், தாத்ரா நாகர் ஹவேலி, டாமன் டையு மற்றும் லட்சத்தீவுகள் ஆகியவை 100 சதவீத இலக்கை எட்டியுள்ளன. இந்த மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் சிறப்பாக செயல்பட்டு போற்றத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருப்பதோடு, இவற்றின் முயற்சிகள் தேசிய அளவில் 50 சதவீத கிராமங்கள் என்ற இலக்கை அடைவதற்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளன.

இந்த கிராமங்களில் திறந்த வெளியில் மலம் கழிக்காத நிலை ஏற்படுத்தப்பட்டிருப்பதோடு, திட அல்லது திரவக் கழிவு மேலாண்மை அமைப்புமுறையும் அமல்படுத்தப்படுகிறது. இதுவரை 2.96 லட்சம் கிராமங்கள் இந்த நிலையை எட்டியுள்ளதன் மூலம் 2024-25ஆம் ஆண்டுக்குள் இரண்டாவது கட்ட கிராமப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் லட்சியங்களை அடையும் உத்வேகம் கிடைத்தாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

2014-15 முதல் 2021-22 வரை கிராமப்புற தூய்மை இந்தியா இயக்கத்திற்காக மத்திய அரசு ரூ. 83,938 கோடியை ஒதுக்கியது. 2023-24ஆம் ஆண்டில் இந்த இயக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 52,137 கோடியாகும். இது தவிர 15ஆவது நிதிக் குழுவின் ஒதுக்கீட்டுத் தொகையும் இந்த இயக்கத்திற்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தூய்மை இந்தியா இயக்கம் என்றால் என்ன?

திறந்த வெளியில் மலம் கழிப்பதை ஒழிக்கவும் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்தவும் மத்திய அரசால் கடந்த 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நாடு தழுவிய பிரச்சாரமாகும். இது 2009ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நிர்மல் பாரத் அபியான் திட்டத்தின் ஒரு வடிவமாகும். நிர்மல் பாரத் அபியான் திட்டமானது, அதன் நோக்கம் கொண்ட இலக்குகளை அடையத் தவறியதால் தூய்மை இந்தியா இயக்கத்தின் முதல் கட்டம் 2019 அக்டோபர் வரை நீடித்தது. 2020-21 மற்றும் 2024-25ஆம் ஆண்டுக்கு இடையில் இரண்டாம் கட்டம், முந்தைய கட்டத்தின் பணிகளை அடுத்தகட்ட பணிகளைத் தொடர்ந்து வருகிறது.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்