ஆப்நகரம்

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு களத்தில் இறங்கும் தனியார் வங்கி!

நிதி நெருக்கடியில் சிக்கி ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் சென்ற தனியார் நிதி நிறுவனம் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனது சேவையைத் தொடங்குகிறது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 27 Dec 2022, 5:42 pm
கடந்த 2018 ஜனவரி மாதத்தில் ரெலிகேர் ஃபின்வெஸ்ட் லிமிடெட் (RFL) நிதி நிறுவனம் மீது ரிசர்வ் வங்கி திருத்தச் செயல் திட்டத்தை அமல்படுத்தியது. கடுமையான நிதி நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் வங்கிகளை மீட்டெடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ரெலிகேர் ஃபின்வெஸ்ட் லிமிடெட் நிறுவனம் புத்தாண்டில் தனது வணிகத்தைத் தொடங்கவிருக்கிறது. இந்நிறுவனத்தின் 2,300 கோடி ரூபாய்க்கான ஒரு முறை தீர்வு (OTS) திட்டத்திற்கு பல்வேறு வங்கிகளிடம் ஒப்புதல் கிடைத்துள்ளது.
Samayam Tamil RBI


OTS செயல்முறை முடிந்ததும் RFL நிறுவனம் திருத்தும் செயல் திட்டத்திலிருந்து (CAP) வெளியே வந்துவிடும். மோசமான நிதிநிலை காரணமாக இந்திய ரிசர்வ் வங்கி 2018 ஜனவரி மாதத்தில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் இவ்வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், தற்போது 16 வங்கிகளில் 14 வங்கிகள் OTS ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகத் தெரிகிறது. மற்ற இரண்டு வங்கிகளும் இந்த வாரத்தில் ஒப்புதல் வழங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரெலிகேர் ஃபின்வெஸ்ட் லிமிடெட் நிறுவனம் முன்பணமாக ரூ.220 கோடியை டெபாசிட் செய்தது. இந்நிறுவனம் SBI தலைமையிலான வங்கிகளின் கூட்டமைப்புக்கு சுமார் 5,300 கோடி ரூபாய் கடன்பட்டுள்ளது. முன்மொழியப்பட்ட OTS திட்டத்தின் கீழ், RFL நிறுவனத்தின் மறுமலர்ச்சிக்கான நடவடிக்கையில் 2022 ஜூன் மாதத்தில் முன்னணி வங்கிகளிடம் ரூ.220 கோடியை முன்பணமாக டெபாசிட் செய்தது. இந்நிறுவனமும் அதன் விளம்பரதாரர்களும் இந்த டிசம்பர் மாத இறுதிக்குள் பணம் செலுத்த தயாராக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. OTS ஒப்பந்தத்தின்படி 90 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும்.

சிறந்த வசூல் மற்றும் கடன் மீட்பு காரணமாக, RFL நிதி திரட்டியுள்ளது. இந்நிறுவனத்தின் முதல் கடன் மறுசீரமைப்பு திட்டம் 2020 மார்ச் மாதத்தில் ரிசர்வ் வங்கியால் நிராகரிக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் முன்னாள் விளம்பரதாரர்களான ஷிவிந்தர் சிங் மற்றும் மல்விந்தர் சிங் ஆகியோர் நிதியை தவறாகப் பயன்படுத்தியதால் RFL நிதி நெருக்கடியில் சிக்கியது. ரூ.4,000 கோடி நிதி முறைகேடு குறித்து பல்வேறு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன. 2020ஆம் ஆண்டில், RFL நிதி முறைகேடுகளுக்காக சிங் சகோதரர்களுக்கு எதிராக FIR பதிவு செய்தது.


இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) இந்த ஆண்டு RFL நிதியைப் பரிமாற்றம் செய்ததற்காக சிங் சகோதரர்கள் உட்பட 10 நிறுவனங்களுக்கு ரூ.60 கோடி அபராதம் விதித்தது. இந்நிலையில் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு RFL வங்கி தனது சேவையை மீண்டும் தொடங்கத் தயாராகியுள்ளது. இதனால் அதன் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்