ஆப்நகரம்

ஸ்விகி, ஜொமாட்டோவுக்கு போட்டியாக களமிறங்கும் அமேசான்!

இந்திய உணவு டெலிவரி சந்தையில் கால்தடம் பதிக்க அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Samayam Tamil 21 May 2020, 9:07 pm
இந்தியாவில் உணவு டெலிவரியை பொறுத்தவரை ஸ்விகி, ஜொமாட்டோ ஆகியவை முன்னணி நிறுவனங்களாக தொழில் செய்து வருகின்றன. இவர்களுக்கு போட்டியாக இருந்த உபர் ஈட்ஸ் நிறுவனமும் சில மாதங்களுக்கு முன் ஜொமாட்டோவுடன் ஒருங்கிணைக்கப்பட்டது.
Samayam Tamil Amazon food


இந்நிலையில், இவர்களுக்கு போட்டியாக தற்போது அமேசான் நிறுவனமும் உணவு டெலிவரி துறைக்குள் நுழைய திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக பெங்களூருவில் சில இடங்களில் மட்டும் உணவு டெலிவரி சேவையை தொடங்கவுள்ளதாக அமேசான் இந்தியா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமேசான் இந்தியா நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் பேசுகையில், “அமேசானில் மற்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவது போலவே சமைக்கப்பட்ட உணவுகளையும் வாங்க விரும்புவதாக சில மாதங்களாக வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். மக்கள் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டிய இச்சூழலில் உணவு டெலிவரி மிக முக்கியமாக இருக்கிறது. உள்ளூர் உணவகத் தொழில்களுக்கு தேவையான உதவி பற்றியும் நாங்கள் அறிவோம்.

பெங்களூருவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் அமேசான் ஃபுட் அறிமுகப்படுத்தப்படும். எங்களது தூய்மை தரநிலைச் சான்றுகளை பூர்த்தி செய்யும் உள்ளூர் உணவகங்கள், கிளவுட் கிட்சன்களிடமிருந்து வாடிக்கையாளர்கள் உணவு ஆர்டர் செய்துகொள்ளலாம். வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதி உயர்நிலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.

பெங்களூருவில் மகாதேவபுரா, மாரத்தஹள்ளி, வைட்ஃபீல்ட், பெல்லந்தூர் ஆகிய நான்கு இடங்களில் மட்டும் சுமார் 100 உணவகங்களில் அமேசான் ஃபுட் சேவை தொடங்கப்படுகிறது. பாக்ஸ்8, சாய் பாய்ண்ட், ஃபாசோஸ், மேட் ஓவர் டோனட்ஸ் , ரேடிசன், மேரியாட் உள்ளிட்ட உணவகங்கள் இதில் அடங்கும். அமேசான் ஆப்பிலேயே உணவுகளை ஆர்டர் செய்துகொள்ளலாம். ஆனால் இந்த நான்கு இடங்களில் வசிப்பவர்களுக்கு மட்டுமே அமேசான் ஆப்பில் உணவு டெலிவரிக்கான ஆப்ஷன் இருக்கும்.

ஜொமாட்டோ நிறுவனம் தனது ஊழியர்களில் 13 விழுக்காட்டினரை வெளியேற்றவுள்ளதாக தெரிவித்துள்ளது. ஸ்விகி நிறுவனமும் 1100 ஊழியர்களை வெளியேற்றப்போவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், அமேசான் நிறுவனத்தின் புதிய திட்டத்தால் வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்