ஆப்நகரம்

கூகுள்பே, போன்பே மூலமாக வங்கிகள் நம்மிடம் பணம் வசூலிக்கிறதா? உண்மை என்ன?

மொபைல் ஆப் மூலமாக பணம் அனுப்பும்போது வங்கிகள் நம்மிடமிருந்து நமக்கே தெரியாமல் கட்டணம் வசூலிக்கிறதா?

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 11 Feb 2023, 12:43 pm
இப்போது அனைவரிடமுமே ஸ்மார்ட்போன் இருக்கிறது. ஸ்மார்ட்போனில் இல்லாத வசதிகளே இல்லை என்று கூறும் அளவுக்கு நிறைய முன்னேற்றம் வந்துவிட்டது. வங்கிக்குச் சென்று பணம் அனுப்பத் தெரியாதவர்கள் கூட இப்போது மிகச் சுலபமாக ஸ்மார்ட்போன் மூலமாக நொடிப் பொழுதில் பணம் அனுப்புகின்றனர். பணம் அனுப்புவது பெறுவது மட்டுமல்லாமல், ஷாப்பிங் செய்வது கட்டணம் செலுத்துவது போன்ற பல்வேறு விஷயங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
Samayam Tamil UPI


டிஜிட்டல் பரிவர்த்தனைகளை இந்திய அரசும் மக்களிடையே ஊக்குவித்து வருகிறது. இதற்காக ஊக்கச் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. டிஜிட்டல் பரிவர்த்தனை பிரபலமாகத் தொடங்கியவுடன் கூகுள் பே, போன் பே, பேடிஎம், ஃபிரீசார்ஜ், சில்லர், போன்ற மொபைல் ஆப்களும் அதிகமாக வந்துவிட்டன. இதில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் ஆகிய மூன்று மொபைல் செயலிகள்தான் பெரும்பாலானோரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த ஆப்கள் முதன்முதலில் வந்த சமயத்தில் வாடிக்கையாளர்களைக் கவருவதற்காக கேஷ் பேக் போன்ற சலுகைகள் வழங்கப்பட்டன. சிலருக்கு 1000 ரூபாய்க்கு மேல் கூட கேஷ் பேக் கிடைத்தது. இதனால் நிறையப் பேர் இந்த ஆப்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். ஆனால் போகப்போக, கேஷ் பேக் சலுகைகள் குறைந்துபோனது. சிலருக்கு 3 ரூபாய், 5 ரூபாய் என்ற அளவில் மட்டுமே கிடைக்கிறது. பலருக்கு கேஷ் பேக் சலுகையே கிடைப்பதில்லை. ”Better Luck next time" என்றே வருகிறது.

கேஷ் பேக் சலுகைகள் தராவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் நம்மிடமிருந்து பணத்தைப் பறிக்காமல் இருந்தால் போதும் என்று சிலர் புலம்புகின்றனர். அதற்குக் காரணம், இந்த ஆப்கள் மூலமாகப் பணம் அனுப்பும்போது அதற்கு சேவைக் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக சிலர் புகார் கூறுகின்றனர். உண்மையில் ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் எந்தக் கட்டணமும் வசூலிக்கக்கூடாது. ஆனால் சில வங்கிகள் அதையும் மீறி வாடிக்கையாளர்களிடம் 2.50 ரூபாய் என்ற அளவில் கட்டணம் வசூலிப்பதாகக் கூறப்படுகிறது. நமக்கே தெரியாமல் வங்கிகள் நம்மிடம் திருடுவதாக சில செய்திகளும் வாட்ஸ் அப் போன்ற ஊடகங்களில் பரவிக் கொண்டிருக்கின்றன.

இதுகுறித்து தனியார் துறை வங்கி அதிகாரி ஒருவரிடம் பேசினோம். அவர் பேசுகையில், “யூபிஐ மொபைல் பரிவர்த்தனைகளுக்கு சேவைக் கட்டணம் எதுவும் கிடையாது. ஆனால் சில வங்கிகளில் கட்டணம் வசூலிப்பதாகக் கூறுகின்றனர். ஆனால் விதிமுறைப்படி கட்டணம் வசூலிக்கக்கூடாது. ஒருவேளை வாடிக்கையாளர்கள் அதைத் தவறாகப் புரிந்திருக்கலாம். ஏனெனில், வாடிக்கையாளர்களிடம் ஏடிஎம் கட்டணம் காசோலைக் கட்டணம், மினிமம் பேலன்ஸ் கட்டணம், எஸ்.எம்.எஸ். கட்டணம் போன்ற பல்வேறு சிறு சிறு கட்டணங்கள் பிடித்தம் செய்யப்படுகின்றன. அதைக் குழப்பிக்கொண்டு யூபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிப்பதாக நினைத்திருக்கலாம்.

LIC பாலிசிதாரர்களுக்கு செம குட் நியூஸ்.. இனி வாட்ஸ்அப் மட்டும் போதும்!
எங்களுடைய வங்கியில் யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிப்பதில்லை. அதேபோல, கட்டணம் வசூலிப்பதற்கு பதிலாக இப்போது பரிவர்த்தனை வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஏனெனில், சில வாடிக்கையாளர்கள் ஒரு நாளில் அதிகபட்சம் 5000 ரூபாய் மட்டுமே அனுப்ப முடிகிறது என்கின்றனர். ஆனால் சிலர் பல லட்சங்கள் வரை அனுப்புகின்றனர். சில வங்கிகளில் நாள் ஒன்றுக்கு இவ்வளவு, மாதம் ஒன்றுக்கு இவ்வளவு என வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அது எந்த அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது என்று தெரியவில்லை. மொபைல் ஆப் மூலமாக அளவுக்கு அதிகமாக பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுவதால் ஏற்படும் தொழில்நுட்ப பிரச்சினைகளை சமாளிக்க இவ்வாறு வரம்புகள் நிர்ணயிக்கப்படலாம்” என்று கூறினார்.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்