ஆப்நகரம்

நகைகளுக்கு ஹால்மார்க் கட்டாயம்.. நகைக் கடைக்காரர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

இந்திய தர நிர்ணய அமைவனம் (BIS ) சென்னை கிளையின் சார்பில் ஹால்மார்க்கிங் பற்றிய நகை வியாபாரிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி வேலூரில் நடைபெற்றது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 28 Mar 2023, 3:42 pm
இந்திய தர நிர்ணய அமைவனம் என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது பொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ முத்திரை), மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், கலைப் பொருள்களுக்கான ஹால்மார்க் தரச்சான்று மற்றும் ஆய்வகச் சேவைகளின் நலன் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.
Samayam Tamil gold


இந்திய தர நிர்ணய அமைவனம், சென்னை கிளை அலுவலகம், நகை வியாபாரிகளுக்கான ஹால்மார்க்கிங் பற்றிய ஜுவல்லர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை இன்று (மார்ச் 28) வேலூர் டார்லிங் ரெசிடெண்சியில் நடத்தியது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வேலூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த நகை வியாபாரிகள் சங்க தலைவர்கள் மற்றும் 150 நகை வியாபாரிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

பிஐஎஸ் சென்னை அலுவலகத்தின் இயக்குனர் மற்றும் தலைவர் ஜி.பவானி விருந்தினர்களை வரவேற்று, நிகழ்ச்சியின் நோக்கங்களை விளக்கினார். மேலும் ஹால்மார்க்கிங் கடந்து வந்த பாதை குறித்தும் விளக்கினார். இணை இயக்குநர் ஜீவானந்தம் BIS ஹால்மார்க்கிங் திட்டம் மற்றும் நடைமுறைகள், ஹால்மார்க்கிங் விதிகள் மற்றும் ஒழுங்குமுறை, நகைக்கடைகளின் பொறுப்புகள், இந்திய தர நியமத்தின் விளக்கம் (IS 1417 & IS 2112) மற்றும் திருத்தங்கள், HUID பற்றியும், ஆன்லைன் பதிவு, manakonline இணையம் பற்றிய அறிமுகம், டெமோ ஆகிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் முறைகள் விளக்கினார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பிஐஎஸ் முன்னெடுக்கும் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தங்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமையும் என்று கூறி பாராட்டினர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த இரண்டு மாதங்களாகவே பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதத் தொடக்கத்தில் மார்ச் 11ஆம் தேதி சென்னையில் நடத்தப்பட்டது. சென்னை வான்டேஜ் ஹாலில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் 82 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தங்க நகை வாங்கும் போது HUID அடையாளம் கட்டாயமாக்கப்படுகிறது. HUID எண் இல்லாத நகைகளை விற்பனை செய்ய முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஏப்ரல் 1 முதல் நகைக் கடையில் தங்கம் வாங்கும் போது, வாடிக்கையாளர்கள் தங்களுடைய நகைகளில் HUID ஐடி உள்ளதா என்று சரிபார்க்க வேண்டும். நகை வாங்குவோருக்கு இழப்பு ஏற்படாமல் தடுக்கவும், தங்கத்தின் தூய்மையை உறுதி செய்யும் வகையிலும் இந்த விதிமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நகை வாங்கும் பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்