ஆப்நகரம்

இனி பைக் வாங்குறது ரொம்ப கஷ்டம்.. அதிரடியாக உயரும் விலை!

டிசம்பர் 1ஆம் தேதி முதல் பைக், ஸ்கூட்டர் விலையை உயர்த்துவதாக ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் அறிவித்துள்ளது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 28 Nov 2022, 3:34 pm
இந்தியாவில் இப்போது பெட்ரோல் - டீசல் விலையேற்றம் பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. இதனால் நிறையப் பேர் தங்களது சொந்த வாகனங்களை விட்டுவிட்டு பேருந்துகளிலும் ரயில்களிலும் பயணிக்கத் தொடங்கிவிட்டனர். வண்டியே வேண்டாம் என்று விற்றவர்களும் உண்டு. அதேபோல, புதிதாக வண்டி வாங்க நினைப்பவர்களும் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது ஆர்வம் செலுத்துகின்றனர். அதற்கு ஏற்றாற்போல, புதிய புதிய வடிவில் சிறந்த அம்சங்களுடன் குறைந்த விலையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
Samayam Tamil bike


இதுபோன்ற சூழலில் வாகனப் பிரியர்களுக்கு மற்றொரு அதிர்ச்சி செய்து வந்துள்ளது. அதாவது, பைக், ஸ்கூட்டர்களின் விலை அதிரடியாக உயருகிறது. இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஹீரோ மோட்டோ கார்ப் தனது வாகனங்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. டிசம்பர் 1ஆம் தேதி முதல் பல்வேறு வகையான ஸ்கூட்டர், பைக்குகளின் விலை உயருகிறது.

விலை உயர்வைப் பொறுத்தவரையில் இருசக்கர வாகனங்களுக்கு ரூ.1500 வரை உயர்வு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. நீங்கள் வாங்கும் பைக்கின் மாடலைப் பொறுத்து இந்த விலை உயர்வு மாறுபடும். ஹீரோ பிளசர், ஸ்பிளெண்டர், பேசன், டெஸ்டினி, ஹெச்.எஃப் டீலக்ஸ் உள்ளிட்ட முக்கியமான பைக்குகளின் விலை உயருவதால் அதன் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்தியாவில் தற்போது பணவீக்க பிரச்சினை அதிகமாக இருப்பதால் அதன் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் இந்த விலை உயர்வை அறிவித்திருப்பதாக ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் காரணம் தெரிவித்துள்ளது. உற்பத்திச் செலவுகள் அதிகரிக்கும்போது அதைச் சமாளிக்கும் வகையில் வாடிக்கையாளர்கள் மீது சுமையை ஏற்றுவது வழக்கமான நடவடிக்கைதான்.


கார், பைக் உள்ளிட்ட வானங்களின் விலையை இவ்வாறு உயர்த்தினாலும் அவற்றின் தேவை அதிகமாக இருந்தால் விற்பனையில் மிகப் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படாது. ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் விலை உயர்வை அறிவிக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல, புத்தாண்டு பிறக்கும் சமயத்தில் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது.

முன்னதாக 2021 டிசம்பர் மாதத்தில் ஹீரோ மோட்டோ கார்ப் பைக் மற்றும் ஸ்கூட்டர்களின் விலை 2000 ரூபாய் வரையில் உயர்த்தப்பட்டது. ஸ்பிளெண்டர், பேசன், ஹெச்.எஃப். டீலெக்ஸ், கிளாமர், எக்ஸ்ட்ரீம், எக்ஸ்.பிளஸ் உள்ளிட்ட மோட்டார் சைக்கிள்களையும், பிளசர், டெஸ்டினி, மேஸ்ட்ரோ உள்ளிட்ட ஸ்கூட்டர்களையும் விற்பனை செய்து வரும் ஹீரோ நிறுவனம், இவற்றின் விலையை வெவ்வேறு அளவில் உயர்த்தியது. இது போன்ற சூழலில் தற்போது மீண்டும் விலை உயர்ந்துள்ளது வாடிக்கையாளர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்