ஆப்நகரம்

அமுலை அலறவிடும் நந்தினி பிறந்த கதை!

Nandini Milk History: கர்நாடக பால் கூட்டமைப்பின் பிராண்டு நந்தினி பிறந்த வரலாறு.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 11 Apr 2023, 12:09 pm
கர்நாடகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அங்கு நந்தினி (Nandini) பால் பிராண்டுக்கு அபாயம் வந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
Samayam Tamil nandini
nandini


கர்நாடக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையத்தின் அதிகாரப்பூர்வ பிராண்டு நந்தினி. தமிழ்நாட்டுக்கு எப்படி கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையத்தின் பிராண்டாக ‘ஆவின்’ (Aavin) இருக்கிறதோ அதேபோல கர்நாடகாவில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையத்தின் பிராண்டாக நந்தினி உள்ளது.

தற்போது இந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையமாக நந்தினி உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பிராண்டாக குஜராத் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையத்தின் பிராண்டான அமுல் (Amul) முதலிடத்தில் உள்ளது.

நந்தினி அரசியல் சர்ச்சை:


இந்நிலையில், அமுல் பிராண்டை திணித்து நந்தினியை அழிக்க முயற்சி நடப்பதாக கர்நாடக அரசியல் களத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு குரல் எழுப்பி வருகின்றன. இதனால் தற்போது கர்நாடகத்தில் நந்தினி ஒரு அரசியல் சர்ச்சையாக மாறியுள்ளது.

ஏப்ரல் 5ஆம் தேதி அமுல் நிறுவனம் ட்விட்டரில், பெங்களூருவில் விரைவில் அமுல் பால் மற்றும் தயிர் விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்தது. இந்த ட்வீட்தான் பிரச்சினையின் ஆரம்ப புள்ளி. கர்நாடக மக்கள் நந்தினியை தங்களது பெருமையாகவே கருதி வருகின்றனர்.

கர்நாடகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில், குஜராத்தி பிராண்டான அமுல் பொருட்களை கர்நாடகத்தில் திணித்து நந்தினியை அழிப்பதற்கு முயற்சிகள் நடைபெற்று வருவதாக எதிர்க்கட்சிகள் அரசியல் செய்து வருகின்றன.

அமுலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தொடர்ந்து நந்தினி பால் மட்டுமே பயன்படுத்துவோம் என பெங்களூரு ஹோட்டல் சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நந்தினி பிராண்டின் வரலாறு:

உலக வங்கியின் பால் வளத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக 1975ஆம் ஆண்டில் கர்நாடக பால் வளர்ச்சி கழகம் (Karnataka Dairy Development Corporation) தொடங்கப்பட்டது. பின்னர் கர்நாடகம் முழுவதும் 13 மாவட்ட கூட்டுறவு பால் சங்கங்களை ஒருங்கிணைத்து 1984ஆம் ஆண்டில் கர்நாடக பால் கூட்டமைப்பு (Karnataka Milk Federation) தொடங்கப்பட்டது.

இந்த கர்நாடக பால் கூட்டமைப்புக்கு கார்ப்பரேட் பிராண்டு பெயராக ‘நந்தினி’ என பெயர் சூட்டப்பட்டது. இன்று இந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய பால் கூட்டமைப்பாக நந்தினி உள்ளது. தென்னிந்தியாவில் விற்பனை மற்றும் பால் கொள்முதல் அடிப்படையில் நந்தினி முதலிடத்தில் இருக்கிறது.

தற்போது கர்நாடகத்தில் 16 பால் சங்கங்களிடம் இருந்து நந்தினி பால் கொள்முதல் செய்து மாநிலம் முழுவதும் உள்ள பகுதிகளுக்கு தனது பால் மற்றும் பால் பொருட்களை விநியோகம் செய்து வருகிறது நந்தினி. கடந்த 2022-23ஆம் நிதியாண்டில் நந்தினி நிறுவனத்தின் மொத்த விற்றுமுதல் (Turnover) 14,018 கோடி ரூபாய்.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்