ஆப்நகரம்

ஊரடங்கு முடிந்தபின் கார் வாங்க மக்கள் ஆர்வம்... காரணம் இதுதான்!

கொரோனா ஊரடங்கு முடிந்தபின்னர் கார் விற்பனையும், இருசக்கர வாகன விற்பனையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Samayam Tamil 30 Apr 2020, 7:45 pm
இந்தியாவில் கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்தாலும், நோய் தாக்கத்தை தணிக்க தனிமனித இடைவெளியை சில வாரங்களுக்கு கடைப்பிடிக்க வேண்டியது மிக அவசியமாக இருக்கும். ஆகையால், ஊரடங்கு முடிவுக்கு பின்னர் பொது போக்குவரத்தை பயன்படுத்த மக்கள் தயக்கம் காட்டுவர் எனவும், அதன் விளைவாக கார் விற்பனைக்கு உத்வேகம் கிடைக்கும் எனவும் ஆய்வு ஒன்று கூறுகிறது.
Samayam Tamil ஊரடங்கு முடிந்தபின் கார் வாங்க மக்கள் ஆர்வம்


இதுகுறித்து கார்ஸ்24 நிறுவனம் நடத்திய ஆய்வில் 3,600 பேர் பங்கேற்று பதிலளித்தனர். அவர்களில் 42 விழுக்காட்டினர் தங்கள் குடும்பத்திற்காக கார் வாங்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர். மற்றொரு 53 விழுக்காட்டினர் அடுத்த ஆறு மாதங்களில் கார் வாங்கலாம் என திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். முக்கியமாக, அதிக சம்பளம் பெறக்கூடிய நபர்கள் வசிக்கும் மெட்ரோ நகரங்களிலேயே கார் வாங்க அதிக நபர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.

மறுபுறம், மெட்ரோ அல்லாத சிறு நகரங்களில் வசிக்கும் 41 விழுக்காடு நுகர்வோர், காருக்கு பதிலாக இருசக்கர வாகனத்தை வாங்கி பயன்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும், ஊரடங்கு முடிவுக்கு வந்தபின் பகிரப்பட்ட கேப் (shared cab) பயணங்கள் கடுமையாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆரம்பநிலை கார்களின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே கேப்களை அதிகம் பயன்படுத்தியவர்களில் 55 விழுக்காட்டினர் இனி தனி கார்களை பயன்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளனர். 15 விழுக்காட்டினர் இருசக்கர வாகனங்களுக்கு மாற விரும்புவதாக தெரிவித்துள்ளனர். மொத்தம் 11 மெட்ரோ நகரங்களிலும், 37 மெட்ரோ அல்லாத நகரங்களிலும் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் மூன்றில் ஒரு பங்கினரிடம் கார் இல்லை என தெரியவந்துள்ளது. ஆய்வில் பங்கேற்றவர்களில் 83 விழுக்காட்டினர் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்