ஆப்நகரம்

அரசு ஊழியர்களின் சம்பளம்.. விரைவில் பெரிய மாற்றம்?

இனி அதிக சம்பளம் கிடைக்குமா?

Samayam Tamil 26 May 2022, 8:04 am
மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள கணக்கீடு தொடர்பான ஃபார்முலா விரைவில் மாற்றப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil central govt employees salary structure may change soon as new formula to be expected
அரசு ஊழியர்களின் சம்பளம்.. விரைவில் பெரிய மாற்றம்?


7ஆவது ஊதியக் குழு!

மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம், பென்சன் போன்ற விஷயங்கள் தற்போது 7ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரையின் பேரில் நிர்ணயிக்கப்படுகின்றன. 7ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையிலேயே இப்போது சம்பளம், பென்சன் கிடைக்கிறது.

அகவிலைப்படி!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இது ஃபிட்மெண்ட் காரணி அடிப்படையில் முடிவுசெய்யப்படுகிறது. ஆனால் அடிப்படை சம்பளம் என்பதில் மாற்றம் இருக்காது. அகவிலைப்படி உயர்வைப் பொறுத்து மொத்த சம்பளத்தில் உயர்வு இருக்கும்.

புதிய ஃபார்முலா!

பணவீக்கத்தைப் பொறுத்து அகவிலைப்படி மாற்றம் இருப்பது போல, அடிப்படை சம்பளத்திலும் மாற்றம் இருக்க வேண்டும் என்ற வகையில் புதிய சம்பள ஃபார்முலா ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை.

அடிப்படை சம்பளம்!

இந்த புதிய ஃபார்முலா அமலுக்கு வந்தால் ஊழியர்களின் அடிப்படைச் சம்பளமானது பணவீக்கம், வாழ்க்கை செலவுகள், ஊழியர்களின் செயல்பாடுகள் போன்றவற்றைப் பொறுத்து அமையும். எனவே ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளமும் உயரும்.

ஏன் இந்த மாற்றம்?

தனியார் துறையில் ஊழியர்களின் சம்பளமானது அவர்களின் செயல்பாடு, திறன் போன்ற பல்வேறு விஷயங்களைப் பொறுத்து உயர்த்தி வழங்கப்படுகிறது. அதேபோலவே அரசுத் துறை ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வுப் பலன்கள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த புதிய ஃபார்முலா உருவாக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

எப்போது அமலாகும்?

2024ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஃபார்முலா அமலுக்கு வர வாய்ப்பு உள்ளது. எனினும், 8ஆவது ஊதியக் குழு வந்த பிறகு 2026ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது. எனினும் இது தொடர்பான ஆலோசனையில் இன்னும் அரசு ஈடுபடவில்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்