ஆப்நகரம்

மூத்த குடிமக்களுக்கு இத்தனை சலுகைகள்.. மத்திய அரசு தகவல்!

மூத்த குடிமக்கள் நலனுக்கான அடல் வயோ அபியுதய் திட்டத்தில் அரசு சாரா அமைப்புகளுக்கு மானிய உதவி வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 16 Mar 2023, 2:57 pm
மூத்தக் குடிமக்களுக்கு அடல் வயோ அபியுதய் திட்டத்தின் ஓர் அம்சமாக ஒருங்கிணைந்த திட்டத்தை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமல்படுத்துகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் மூத்தக் குடிமக்களுக்கான இல்லங்களை நடத்தும் (பராமரிக்கும்) அரசு சாரா அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு மானியத்துடன் நிதியுதவி வழங்கப்படுகிறது.
Samayam Tamil senior citizen


இந்தத் திட்டத்தின் கீழ், குடியிருப்பு, ஊட்டச்சத்து, மருத்துவ கவனிப்பு, பொழுதுபோக்கு போன்ற வசதிகள் மூத்தக் குடிமக்களுக்கு கட்டணமின்றி வழங்கப்படுகின்றன. இந்தத் திட்டங்களுக்கு மானியம் பெறும் அமைப்புகளை கண்காணிக்க தனிப்பிரிவை சமூக நீதி அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது. எதிர்மறையான அறிக்கை இந்தப் பிரிவில் இருந்து வரப்பெற்றால், சம்பந்தப்பட்ட அரசு சாரா அமைப்பிடமிருந்து விளக்கம் கோரும் வாய்ப்பு அளிக்கப்படும். இதற்கான பதில் திருப்தி அளிக்கவில்லை என்றால், அந்த அமைப்புக்கு அளிக்கப்படும் மானியம் நிறுத்தப்படும்.

மாநிலங்களவையில் இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு எழுத்துப் பூர்வமாக பதில் அளித்த மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் ஏ.நாராயணசாமி இந்தத் தகவலைத் தெரிவித்தார். முதிஓருக்கான தேசியக் கொள்கை குறித்து எழுப்பப்பட்ட மற்றுமொரு கேள்விக்கு பதில் அளித்த அவர், ”மூத்த குடிமக்களின் நலனை உறுதி செய்வதற்காக 1999ஆம் ஆண்டு மூத்த குடிமக்களுக்கான தேசியக் கொள்கை அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கான நிதி மற்றும் உணவுப் பாதுகாப்பு, உடல்நலன், இருப்பிடம், இதர தேவைகள், தாக்குதல் மற்றும் சுரண்டலுக்கு எதிரான பாதுகாப்பு, அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான சேவைகள் ஆகியவை இக்கொள்கையில் இடம்பெற்றுள்ளன” என்றார்.

நிலையான மாதிரி சேவைகள் குறித்த கேள்விக்கு, “சமுதாயத்தில் கூட்டுக் குடும்ப முறை படிப்படியாக குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலப் பராமரிப்புச் சட்டம் 2007 கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தை முறையாக செயல்படுத்தும் வகையில் அரசு மாதிரி விதிமுறைகளை மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ளது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்ற கள ஏதார்த்தங்களைக் கருத்தில் கொண்டு மாநில விதிமுறைகளை வகுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடையில் இனி ஏமாற்ற முடியாது.. அரசு நடவடிக்கை!
இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், பல்வேறு தரப்பில் இருந்தும் வந்த ஏராளமான புகார்கள் மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தச் சட்டத்தை செயல்திறனுடன் அமல்படுத்தும் வகையில் தேவையான திருத்தங்களை செய்ய முடிவு செய்யப்பட்டது. பல்வேறு அமைச்சர்கள், மாநில அரசுகள் தன்னார்வ அமைப்புகள், கள நிபுணர்கள் ஆகியோரை கலந்தாலோசித்து, பெற்றோர் மற்றும் மூத்தக் குடிமக்கள் நலப் பராமரிப்பு (திருத்த) மசோதா -2019 மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது” என்று கூறினார்.

மேற்கத்திய நாடுகளை ஒப்பிடுகையில் வயதானவர்களை பராமரிப்பதில் இந்தியாவில் உள்ள குடும்பங்கள் இன்றும் முதல் பராமரிப்பாளர்களாக உள்ளன என்று அவர் தெரிவித்தார்.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்