ஆப்நகரம்

உணவு தானிய கொள்முதலுக்கு தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி!

இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகளிலிருந்து நேரடியாக உணவு தானியங்களை கொள்முதல் செய்துகொள்ள தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

Samayam Tamil 8 Apr 2020, 10:29 pm
கோவிட்-19 கொள்ளை நோயை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 25ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இச்சூழலில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பதற்கு மத்தய அரசு அனுமதியளித்துள்ளது. மேலும், ஏழை மக்களுக்கு உதவும் வகையில் ரேஷன் கடைகள் மூலமாக உணவு தானியங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
Samayam Tamil உணவு தானிய கொள்முதலுக்கு தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி


இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் ஏழைகளுக்கு உணவளிப்பதற்காக இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகளிலிருந்து அரிசி, கோதுமை தானியங்களை நேரடியாக கொள்முதல் செய்ய தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. மாநில அரசுகளுக்கும், மாவு மில்களுக்கும் விற்பனை செய்யப்படும் விலையில் தொண்டு நிறுவனங்களுக்கும் விற்பனை செய்யப்படும்.

திறந்தவெளிச் சந்தையில் ஒரு குவிண்டால் அரிசி ரூ.2,250க்கும், ஒரு குவிண்டால் கோதுமை ரூ.2,135க்கும் இந்திய உணவுக் கழகம் விற்பனை செய்துவருகிறது. ஏலங்களில் பங்கேற்காமலேயே நாடு முழுவதும் உள்ள சுமார் 2000 கிடங்குகளிலிருந்து 10 டன் வரை உணவு தானியங்களை சந்தை விலையில் கொள்முதல் செய்துகொள்ள தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 7ஆம் தேதி வரையில் 54.42 மில்லியன் டன் உணவு தானியங்களை இந்திய உணவுக் கழகம் விநியோகித்துள்ளது. இதில் 30.62 மில்லியன் டன் அரிசியும், 23.80 மில்லியன் டன் கோதுமையும் அடங்கும். தற்போதைய நிலவரத்தை இந்திய உணவுக் கழகம் உன்னிப்பாக கவனித்துவருகிறது. தேவைக்கு ஏற்ப சீராக உணவு தானியங்கள் விநியோகிக்கப்படும் என்று இந்திய உணவுக் கழகம் உறுதியளித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்