ஆப்நகரம்

கலைஞர் போட்ட விதை இப்போது ஆலமரமாகிவிட்டது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

கலைஞர் போட்ட விதை இப்போது ஆலமரமாகிவிட்டதாக ஹூண்டாய் முதலீடு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 11 May 2023, 6:18 pm
ஹூண்டாய் மோட்டார் (Hyundai Motor) நிறுவனம் தமிழ்நாட்டில் 20,000 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
Samayam Tamil Hyundai - TN MoU
Hyundai - TN MoU


இந்நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, “1996-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ஹூண்டாய் நிறுவனத்தினுடைய முதல் அலகிற்கு அடிக்கல் நாட்டினார்கள். 4,000 கோடி ரூபாய் முதலீட்டில் இரண்டாவது தொழிற்சாலையையும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 2008-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கப்பட்டது.

இதே ஹூண்டாய் நிறுவனத்தினுடைய ஒரு கோடியாவது காரை 2021-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொழிற்சாலையில் இருந்து நான் அறிமுகம் செய்து வைத்தேன். தமிழ்நாட்டிற்கும், ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்திற்கும் இடையே உள்ள நம்பிக்கை மற்றும் கூட்டு முயற்சியின் காரணமாக இந்த நிறுவனத்தினுடைய மொத்த முதலீடு சுமார் 23 ஆயிரத்து 900 கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. தற்போது ஹூண்டாய் நிறுவனம், இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய கார் உற்பத்தி நிறுவனமாகவும், கார் ஏற்றுமதியில், இரண்டாவது இடத்தில் இருப்பதும் மகிழ்ச்சி.

ஆட்டோமொபைல் மற்றும் அதன் பாகங்கள் தயாரிப்பில், தமிழ்நாடு, இந்தியாவிலேயே முதலிடத்தை வகிக்கிறது. அதன் அடுத்த பரிணாம வளர்ச்சியாக, மின்னூர்திகள் (Electrical vehicles) தயாரிப்பில் தற்போது தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உருவாகியுள்ளது. இதற்கு, தமிழ்நாட்டில் உள்ள திறன் வாய்ந்த மனித வளம், உலகத் தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு ஆகியவற்றுடன், தமிழ்நாடு அரசின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் முக்கிய காரணங்களாக உள்ளன. அந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகத்தான், 2023-ஆம் ஆண்டு பிப்ரவரியில் "தமிழ்நாடு மின்வாகனக் கொள்கை 2023" வெளியிடப்பட்டது.

இதன் காரணமாக, ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், இந்தியாவிற்கும், பிற உலக நாடுகளுக்கும், மின்னூர்தி தயாரித்தலுக்கான தனது நெடுங்கால முதலீட்டுத் திட்டத்திற்கு, முதன்மை தளமாக தமிழ்நாட்டை தேர்வு செய்துள்ளது. அதற்காக, தமிழ்நாடு அரசின் சார்பாக எனது நன்றியை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஹுண்டாய் நிறுவனம், இருங்காட்டுக்கோட்டையில் தற்போதுள்ள தொழிற்சாலையினை, உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைக்கான மின்னூர்தி மையமாக மேம்படுத்தும். இந்நிறுவனம், சுற்றுச்சூழலுக்கு உகந்த, நீடித்து நிலைக்கத்தக்க தயாரிப்பினை முக்கிய கருப்பொருளாகக் கொண்டு, 15 ஆயிரம் நபர்களுக்கு நேரடியாகவும், 2 இலட்சத்து 50 ஆயிரத்திற்கு அதிகமானோருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைவர் கலைஞருடைய ஆட்சியில் தொடங்கப்பட்டு, தமிழ்நாட்டில் பல விரிவாக்கங்களையும், வளர்ச்சித் திட்டங்களையும் மேற்கொண்டு வரும் ஹூண்டாய் நிறுவனம், தற்போது 20,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய முன்வந்திருப்பது இதுவே சாட்சியாக அமைந்திருக்கிறது. இந்த முதலீடு, தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030-ஆம் ஆண்டிற்குள், ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்திட வேண்டும் என்ற நமது இலட்சிய இலக்கினை அடைவதற்கு ஒரு பாய்ச்சலாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.

தொழில் துறை நிச்சயமாக ஏற்கனவே முன்னேறி வந்திருக்கிறது. இன்னும் முன்னேறப் போகிறது. அதற்கு இன்னுமொரு உதாரணம் சொல்ல வேண்டுமென்று சொன்னால், நான் கடந்த ஆண்டும் சரி, இப்போது இந்த ஆண்டும் சரி, எந்த நிகழ்ச்சியில் அதிகம் கலந்து கொண்டிருக்கிறேன் என்று சொன்னால், தொழில்துறை நிகழ்ச்சியில் தான் அதிகம் கலந்து கொண்டிருக்கிறேன். அதுவே அதற்கு சாட்சியாக அமைந்திருக்கிறது” என்று பேசினார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “இனி வரும் காலத்தில் கோலோச்சப் போகும் துறைகளில் பெரும் முதலீடுகளை ஈர்த்து, தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு அடைந்து வரும் உயரங்களுக்கு மற்றுமொரு மகத்தான சான்றாக, ஹூண்டாய் நிறுவனம் 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ்நாட்டில் தங்கள் உற்பத்திகளை விரிவு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

கால்நூற்றாண்டுக்கு முன் தலைவர் கலைஞர் அவர்கள் ஹூண்டாய் தொழிற்சாலையைத் தொடங்கி வைத்து விதைத்த விதை, இன்று ஆல் போல் தழைத்துள்ளது. ஒரு ட்ரில்லியன் டாலர் இலக்கை நோக்கி முன்னேற ஒவ்வொரு நாளும் உழைப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்