ஆப்நகரம்

சாதனை படைத்த இந்தியா.. நிலக்கரி உற்பத்தி அமோகம்!

2022-23 நிதியாண்டின் ஏப்ரல் - பிப்ரவரி காலகட்டத்தில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 784.41 மில்லியன் டன்னை எட்டியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 2 Mar 2023, 7:36 am
இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி குறித்த விவரங்களை மத்திய நிலக்கரி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நடப்பு 2022-23 நிதியாண்டில் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 784.41 மில்லியன் டன் அளவுக்கு நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்ட உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் இது 15.10 சதவீதம் அதிகமாகும். கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 681.5 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டிருந்தது.
Samayam Tamil coal production


இந்த நிதியாண்டில் கோல் இந்தியா நிறுவனம் பிப்ரவரி மாதம் வரை 619.70 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளது. கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் 542.38 மில்லியன் டன் நிலக்கரியை கோல் இந்தியா உற்பத்தி செய்திருந்தது. இந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் முந்தைய நிதியாண்டை விட கோல் இந்தியா நிறுவனம் 14.26 சதவீதம் அதிகமாக நிலக்கரியை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.

நிலக்கரி அமைச்சகம் நிலக்கரியைப் பல்வேறு பகுதிகளுக்கு விரைந்து எடுத்துச் செல்ல பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டத்தின் கீழ், ரயில் போக்குவரத்து இணைப்பு வசதிகளை அதிகளவில் ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரை 793.86 மில்லியன் டன் நிலக்கரி விநியோகிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் 740.96 மில்லியன் டன் நிலக்கரி விநியோகம் செய்யப்பட்டிருந்தது.

முன்னதாக, ஏப்ரல் - ஜனவரி காலகட்டத்தில் நிலக்கரி உற்பத்தி 16 சதவீதம் அதிகரித்து 698.25 மில்லியன் டன்னை எட்டியது. 2021-22ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 601.97 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. இந்த காலகட்டத்தில் கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி 478.12 மில்லியன் டன்னிலிருந்து 550.93 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. இது 15.23 சதவீதம் அதிகமாகும். கூடுதல் மின் நுகர்வால் ஏற்படும் நிலக்கரித் தேவையை சமாளிக்க இந்த உற்பத்தி உயர்வு உதவிகரமாக அமைந்தது.

நிலக்கரி உற்பத்தியை உயர்த்த இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் நிலக்கரி விநியோகப் பிரச்சினை மற்றும் தட்டுப்பாடு காரணமாக மின்சார உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது உற்பத்தி மேம்பட்டு இயல்பு நிலை திரும்பியுள்ளது. நிலக்கரி உற்பத்தியை அதிகப்படுத்த இலக்கு நிர்ணயம் செய்து அதன்படி இந்திய அரசு செயல்பட்டு வருகிறது. அடுத்து வரும் மாதங்களிலும் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்