ஆப்நகரம்

மக்களின் EPFO பணத்துக்கு ஆபத்து.. எல்லாத்தையும் அதானிக்கு கொடுப்பீங்களா.. ராகுல் காந்தி காட்டம்!

அதானி நிறுவனங்களில் EPFO நிதி தொடர்ந்து முதலீடு செய்யப்பட்டு வருவதாக ராகுல் காந்தி விமர்சனம்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 28 Mar 2023, 2:15 pm
அதானி நிறுவனங்களில் EPFO ஏன் முதலீடு செய்கிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
Samayam Tamil rahul gandhi
rahul gandhi - epfo


அதானி குழுமம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக ஜனவரி மாதம் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து அதானி பங்குகள் பயங்கரமாக சரிந்துள்ளன.

அதானி நிறுவனங்களில் LIC நிறுவனம் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாகவும், SBI உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் அதானி குழுமத்துக்கு நிறைய கடன்களை வழங்கியுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

EPFO நிறுவனம் இந்தியர்களின் வருங்கால வைப்பு நிதியை நிர்வகித்து வருகிறது. EPFO நிறுவனம் தன்னிடம் உள்ள நிதியை பங்கு சந்தையிலும் முதலீடு செய்கிறது. வழக்கமாக நிப்டி 50 (Nifty 50) ETFகளில் EPFO நிறுவனம் தனது நிதியை முதலீடு செய்கிறது.

மார்ச் 30ஆம் தேதி முதல் ஆறு மாதங்களுக்கு நிப்டி 50 பட்டியலில் அதானி போர்ட்ஸ் மற்றும் அதானி எண்டர்பிரைசஸ் ஆகிய இரண்டு அதானி நிறுவனங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், 2015 செப்டம்பர் மாதம் முதல் நிப்டி 50 பட்டியலில் அதானி போர்ட்ஸ் நிறுவனம் இருந்து வருகிறது.

ஆக, EPFO நிறுவனத்தின் முதலீடுகள் அதானி போர்ட்ஸ் மற்றும் அதானி எண்டர்பிரைசஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களிலும் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் இந்தியர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதியம் ஆபத்தில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில், “LIC பணம் அதானிக்கு. SBI பணம் அதானிக்கு. இப்போது EPFO பணமும் அதானிக்கு. மோடியும் அதானியும் அம்பலப்பட்ட பிறகும் மக்களின் ரிட்டயர்மெண்ட் நிதி ஏன் அதானி நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுகிறது? பிரதமரே, விசாரணையும் இல்லை, பதிலும் இல்லை. ஏன் நீங்கள் பயப்படுகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


மேலும் காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில், “EPFO பணமும் அதானிக்கு கொடுக்கப்பட்டுவிட்டதா? என்னவொரு நட்பு. உங்கள் நட்பு தினமும் வளர்ந்து வருகிறது. முதலில் SBI, பிறகு LIC, இப்போது EPFO. ஒட்டுமொத்த நாட்டையும் உங்கள் நண்பருக்கு கொடுத்துவிடுவீர்களா?” என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்