ஆப்நகரம்

தங்கக் கடன்களுக்கு மவுசு... மக்கள் அதிக ஆர்வம் காட்டுவது ஏன்?

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தங்கக் கடன்களுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது.

Samayam Tamil 9 Jun 2020, 7:07 pm
கொரோனா பாதிப்பால் சிறு வணிகர்கள், நடைபாதை வியாபாரிகள், வர்த்தகர்களின் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு கடைகள் படிப்படியாக திறக்கப்பட்டுள்ளதால், தொழில் மூலதனம் திரட்ட நகைக் கடன்களில் வர்த்தகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Samayam Tamil தங்கக் கடன்


மற்றக் கடன்களை காட்டிலும் நகைக் கடன்களை எளிதாக பெற்றுவிட முடியும். செயல்முறைகளும் எளிதாக இருப்பதால் கடன் பெறுவதில் கெடுபிடிகள் குறைவு. மேலும், தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போவதால் ஒரு கிராம் தங்கத்துக்கு கூடுதல் பணம் பெற முடிகிறது. ரிசர்வ் வங்கி விதிமுறைகளின்படி, அடகு வைக்கப்பட்ட தங்கத்தின் மதிப்பில் 75 விழுக்காட்டை கடனாக வழங்கலாம்.

தற்போது சிட்டி யூனியன் வங்கியில் தங்கக் கடன்கள் 7 விழுக்காடு அதிகரித்துள்ளது. சராசரியாக இந்த வங்கியில் தங்கக் கடன்களின் வளர்ச்சி 3 விழுக்காடக இருக்கும். மேலும், சராசரியாக கோரப்படும் கடன் தொகையும் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சமாக உயர்ந்துள்ளது. தற்போது பச்சை மண்டலங்களாக இருக்கும் தஞ்சாவூர், மதுரை, திருச்சி போன்ற மாவட்டங்களில் தங்கக் கடன்களுக்கான தேவை அதிகரித்துள்ளதாக தெரிகிறது. இம்மாவட்டங்களில் பொருளாதார செயல்பாடுகள் மீண்டும் தொடங்கியுள்ளதையே இது குறிக்கிறது

இதுகுறித்து சிட்டி யூனியன் வங்கியின் துணை பொது மேலாளரான லஷ்மிநாராயணன், “நாங்கள் ரூ.60 கோடிக்கு தங்கக் கடன்கள் வழங்கியிருக்கிறோம். அதில் ரூ.40 கோடி மதிப்பிலான கடன்கள் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒப்புதல் பெற்றவை” என்று தெரிவித்துள்ளார்.

வங்கிசாரா நிதி நிறுவனமான மணப்புரம் பைனான்ஸ் வழங்கும் சராசரி தங்கக் கடன் தொகை ரூ.38,500இல் இருந்து ரூ.41,000ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நந்தகுமார், “தொழில்கள் மீண்டும் தொடங்கியுள்ளதால் தங்கக் கடன்களுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களில் டிமாண்ட் அதிகமாக இருக்கிறது. கிராமப்புறங்களில் இன்னும் தேவை அதிகரிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

ஐஎஃப்எல் பைனான்ஸ் நிறுவனத்திலும் தங்கக் கடன்களுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனத்தின் தங்கக் கடன் பிரிவு தலைவர் சுரப் குமார் தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதத்தைக் காட்டிலும் மே மாதத்தில் தங்கக் கடன்கள் பத்து மடங்கு அதிகரித்துள்ளதாக ஃபெடரல் வங்கி தெரிவித்துள்ளது. இந்தியன் வங்கியும் மே மாதத்தில் 3.30 லட்சம் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.3,000 கோடிக்கு தங்கக் கடன் வழங்கியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்