ஆப்நகரம்

பிஎஃப் பணத்தை இப்போ எடுக்கலாமா? எடுத்தால் ஆபத்து!

பிஎஃப் பணத்தை ஏன் எடுக்கக் கூடாது?

Samayam Tamil 6 Apr 2021, 7:02 pm
கொரோனா அச்சம், வேலையை விட்டு வேறு வேலைக்குச் செல்வது போன்ற காரணங்களுக்காக பிஎஃப் பணத்தை உடனடியாக எடுத்தால் ஆபத்து என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். காரணம் என்ன?
Samayam Tamil dont withdraw pf money immediately you can avail interest for many years
பிஎஃப் பணத்தை இப்போ எடுக்கலாமா? எடுத்தால் ஆபத்து!


காலியாகும் பிஎஃப் பணம்!

இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால் அரசு தரப்பிலிருந்து பொருளாதாரச் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. அதோடு, பிஎஃப் சேமிப்புப் பணத்தை உடனடியாக எடுத்துப் பயன்படுத்த மத்திய அரசு வழிவகை செய்திருந்தது. தொழிலாளர் வைப்பு நிதி உறுப்பினர்கள் திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியம் இல்லாத முன்தொகையைப் பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. அதன்படி, பிஎஃப் பணத்தை அதிகளவில் எடுத்து வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் வேலையை விட்டு வேறு வேலைக்குச் செல்வது போன்ற காரணங்களுக்காகவும் பலர் பிஎஃப் பணத்தை எடுக்கின்றனர்.

எடுத்தால் ஆபத்து!

கொரோனா நெருக்கடி காலத்தில் உங்களுக்குப் பணம் தேவைப்பட்டால் பிஎஃப் பணத்தில் இருந்து எடுப்பதைத் தவிர்த்துவிட்டு, மாற்று வழிகளை யோசிக்கும்படி நிபுணர்கள் கூறுகின்றனர். பிஎஃப் சேமிப்புப் பணத்தை இப்போது எடுத்தால் அதன் முதிர்வு காலத்தில் மிகப் பெரிய தொகையை நீங்கள் இழக்கக் கூடும். பிஎஃப் சேமிப்பிலிருந்து பணத்தை எடுப்பதற்குப் பதிலாக நகைக் கடன் உள்ளிட்ட வேறு வழிகளில் பணத்தைத் திரட்டலாம். பிஎஃப் சேமிப்பில் உங்களுக்கு 8.5 சதவீத வட்டி கிடைக்கிறது. உங்கள் ஓய்வூதியத்தில் 30 ஆண்டுகள் மீதமுள்ள நிலையில் இப்போது உங்கள் பிஎஃப் கணக்கிலிருந்து ரூ.1 லட்சத்தை எடுத்தால் 30 ஆண்டுகள் கழித்து உங்களுக்கு ரூ.11.55 லட்சம் இழப்பு ஏற்படும்.

என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் இப்போது பார்க்கும் வேலையை விட்டு நின்றாலோ அல்லது அந்த வேலையில் இருந்து நீங்கள் நீக்கப்பட்டாலோ பிஎஃப் பணத்தை எடுக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. உங்களது பிஎஃப் பணத்துக்கு தொடர்ந்து வட்டி வந்துகொண்டிருக்கும். புதிய வேலையில் சேர்ந்தவுடன் அதே பிஎஃப் கணக்கில் நீங்கள் தொடர்ந்து சேமிக்க முடியும். உங்களது ஓய்வு காலத்துக்குப் பின்னரும் மூன்று ஆண்டுகளுக்கு உங்களுக்கு பிஎஃப் வட்டி கிடைக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். எனவே பிஎஃப் பணத்தை எதிர்காலப் பாதுகாப்பாகக் கருதி தொடர்ந்து சேமிக்க வேண்டும். வேறு வழியே இல்லை என்று வரும் நிலையில் பிஎஃப் பணத்தை தேவையான அளவு எடுத்துப் பயன்படுத்தலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்