ஆப்நகரம்

இந்தியப் பொருளாதாரத்தை விட நாட்டு மக்களின் உயிரே முக்கியம்!!

ஊரடங்கு உத்தரவால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியை விட நாட்டு மக்களின் உயிரே முக்கியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 14 Apr 2020, 5:57 pm
உலகையே புரட்டிப் போட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்புகளைக் குறைக்க இந்திய அரசு தொடர்ந்து போராடி வருகிறது. 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா தீவிரம் குறையாததால் ஊரடங்கு உத்தரவு மேலும் 19 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை இன்று காலையில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். இதுகுறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகள் உறுதியுடன் இருப்பதாகவும், நாட்டு மக்களின் தியாகத்தால்தான் இதுவரையில் கொரோனா தாக்குதலை நாம் பெருமளவு கட்டுப்படுத்தி வருகிறோம் எனவும் கூறினார்.
Samayam Tamil இந்தியப் பொருளாதாரத்தை விட நாட்டு மக்களின் உயிரே முக்கியம்


அவர் மேலும் பேசுகையில், “சமுக விலகலிலிருந்தும் பொது முடக்கத்திலிருந்தும் நம் நாடு பெரிதும் பயனடைந்திருக்கிறது. பொருளாதார ரீதியாக இதற்கு நாம் அதிக விலை கொடுத்திருப்பதாக எவ்வித சந்தேகத்துக்கும் இடமின்றித் தெரிகிறது. ஆனால், இந்திய மக்களின் உயிரோடு அளவிடும் போது இது ஒரு ஒப்பீடே அல்ல. இந்தியா தற்போது தேர்ந்தெடுத்துள்ள பாதையானது ஒட்டுமொத்த உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. நாம் சரியான பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்பது கடந்த சில நாட்களின் அனுபவத்திலிருந்து தெளிவாகத் தெரிகிறது” என்றார்.

கடனைச் செலுத்த அவகாசம் வேண்டும்: வணிக வளாகங்கள் கோரிக்கை!

நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டு ஏப்ரல் 20ஆம் தேதிக்குப் பிறகு, சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு குறிப்பிட்ட அளவுக்கான விலக்கு அளிக்கப்படுவதாகவும் மோடி அறிவித்துள்ளார். தினக்கூலி பெறுபவர்கள், தங்களது அன்றாட உணவுக்கு தினக்கூலியை நம்பி இருப்பவர்களின் வாழ்வில் ஏற்படும் சிரமங்களைக் குறைப்பதற்கு மிகுந்த முன்னுரிமை அளிப்பதாகவும், பிரதமரின் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் மூலமாக அவர்களுக்கு உதவுவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் மோடி தெரிவித்தார்.

தொழிலாளர்களின் குறைதீர்க்க சிறப்பு மையங்கள்: மத்திய அரசு நடவடிக்கை!

தற்போது ரபி பருவ பயிர்களை அறுவடை செய்யும் பணி நடைபெற்று வரும் நிலையில், விவசாயிகளின் பிரச்சினைகளைக் குறைப்பதற்காக மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து செயல்பட்டு வருவதாக பிரதமர் மோடி தனது உரையில் கூறினார். இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சிப் பாதையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பதாகப் பல்வேறு சர்வதேச ஆய்வு நிறுவனங்கள் எச்சரித்துள்ள நிலையிலும், நாட்டு மக்களின் பாதுகாப்பு மீது அக்கரை கொண்டு ஊரடங்கு உத்தரவை துணிச்சலுடன் நீட்டித்துள்ளார் பிரதமர் மோடி.

அடுத்த செய்தி

டிரெண்டிங்