ஆப்நகரம்

இந்த வளர்ச்சி போதுமா? இந்த இந்தியாவுக்கு போதாத காலம்!!

டிசம்பர் காலாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்தை விடக் குறைவாகவே இருக்கும் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 22 Feb 2023, 10:56 am
இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சார்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நடப்பு நிதியாண்டின் அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 4.6 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வளர்ச்சிக்கான கணக்கீட்டில் முக்கியமான 30 காரணிகள் முந்தைய நிதியாண்டுகளில் இருந்த அளவுக்கு இல்லை என்பதால் வளர்ச்சி மதிப்பீடு குறைக்கப்பட்டுள்ளதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
Samayam Tamil india


ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள இந்த மதிப்பீடு முன்னதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்த மதிப்பீட்டை அதிகம் என்பது சற்று ஆறுதல் தரும் செய்தியாகும். ஏனெனில் ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்த அறிக்கையில், அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் இந்தியா 4.4 சதவீத வளர்ச்சியை மட்டுமே கொண்டிருக்கும் என்று தெரிவித்திருந்தது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஆய்வறிக்கையில், நடப்பு நிதியாண்டில் இந்தியா 7 சதவீத வளர்ச்சியைக் கொண்டிருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

2019-20 முதல் 2021-22 வரையிலான நிதியாண்டுகளின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீடுகளை அரசு மீண்டும் மறு மதிப்பீடு செய்து வெளியிட உள்ளது. அதன்படி பார்க்கும்போது நடப்பு நிதியாண்டுக்கான வளர்ச்சி விகிதம் அதிகமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. பொருளாதார வளர்ச்சி குறித்த மற்ற முன்னணி ஆய்வு நிறுவனங்களும் தங்களது ஆய்வு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. சமீபத்தில் இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்த அறிக்கையில், 2023-24 நிதியாண்டில் இந்தியா 5.9 சதவீத வளர்ச்சியைக் கொண்டிருக்கும் என்று கூறியிருந்தது.

இந்தியப் பொருளாதாரம் என்பது கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகவே பெரும் வீழ்ச்சியையும் சிறிது ஏற்றத்தையும் சந்தித்து வந்துள்ளது. 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சியை இந்தியா சந்தித்தது. அதன் பின்னர் 2021ஆம் ஆண்டில் கொரோனா தடுப்பூசித் திட்டம் மற்றும் ஊரடங்கு தளர்வுகளால் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பிய இந்தியா, கொரோனா இரண்டாம் அலையால் மீண்டும் பின்னடைவைச் சந்தித்தது.

ஓலா ரேபிடோ பைக் சேவை ரத்து.. அரசு அதிரடி உத்தரவு.. பொதுமக்கள் அதிர்ச்சி!

இதுபோன்ற சூழலில் கடந்த 2022ஆம் ஆண்டில்தான் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியது. இடையில் ரஷ்யா - உக்ரைன் போர், சர்வதேச மந்தநிலை போன்ற பிரச்சினைகள் இருந்தாலும் அதையெல்லாம் சமாளித்து இந்தியா முன்னேறிச் செல்கிறது. உலகின் மிக வேகமான வளரும் பொருளாதாரமாகவும் இந்தியா திகழ்கிறது. பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த மத்திய அரசும் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்த மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற ரிசர்வ் வங்கி நாணயக் கொள்கைக் கூட்டத்தில், 2022-23 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 6.8 சதவீதமும், 2023-24 நிதியாண்டில் 6.4 சதவீதமும் வளரும் என்று ரிசர்வ் வங்கி மதிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்