ஆப்நகரம்

TATA தலைவர் சந்திரசேகரனுக்கு செவாலியர் விருது வழங்கி கவுரவித்த பிரான்ஸ்!

டாடா குழும தலைவர் சந்திரசேகரனுக்கு பிரான்ஸ் அரசு செவாலியர் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 17 May 2023, 5:59 pm
டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரனுக்கு (N Chandrasekaran) பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது (Chevalier de la Légion d’honneur) வழங்கி பிரான்ஸ் அரசு கவுரவித்துள்ளது.
Samayam Tamil n chandrasekaran - chevalier
n chandrasekaran - chevalier


டாடா குழுமத்தின் தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த என்.சந்திரசேகரன் பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலத்தில் டாடா குழுமம் நல்ல வளர்ச்சியை அடைந்துள்ளது. டாடா குழுமம் பல்வேறு புதிய தொழில்களில் கால்தடம் பதித்ததற்கும் சந்திரசேகரன் முக்கிய காரணமாக இருக்கிறார்.

இந்நிலையில், இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையேயான வர்த்தக உறவை வலுப்படுத்தியதற்காக சந்திரசேகரனுக்கு செவாலியர் விருது வழங்கி பிரான்ஸ் அரசு கவுரவித்துள்ளது. சந்திரசேகரனுக்கு செவாலியர் விருதை பிரான்ஸ் வெளியுறவு துறை அமைச்சர் கேத்தரின் கொலோனா வழங்கினார்.


இந்த விருது வழங்கும் நிகழ்வில் பிரான்ஸ் நாட்டுக்கான இந்திய தூதர் ஜாவித் அஷ்ரஃப், இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இமானுவேல் லினயன் மற்றும் வர்த்தக பிரதிநிதிகள் பங்கேற்றனர். மேலும் சந்திரசேகரனின் மனைவி லலிதா மற்றும் மகன் பிரணவ் ஆகியோரும் பங்கேற்றனர்.

சந்திரசேகரனுக்கு செவாலியர் விருது வழங்கியது குறித்து இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இமானுவேல் லினயன் தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்புள்ள நடராஜன் சந்திரசேகரன், நீங்கள் பிரான்ஸ் நாட்டின் உண்மையான நண்பர்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.


ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கியதை தொடர்ந்து, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஏர்பஸ் நிறுவனத்திடம் 250 விமானங்களை வாங்குவதற்கு ஏர் இந்தியா நிறுவனம் ஆர்டர் கொடுத்துள்ளது. இது இந்தியா - பிரான்ஸ் இடையேயான வர்த்தக உறவில் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் சந்திரசேகரனுக்கு செவாலியர் விருது வழங்கி பிரான்ஸ் அரசு கவுரவித்துள்ளது. கடந்த மாதம் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவுக்கு ஆஸ்திரேலிய அரசு அந்நாட்டின் உயரிய விருதான 'Order of Australia’ விருதை வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான உறவை வலுப்படுத்துவதற்காக ரத்தன் டாடா எடுத்த முயற்சிகளுக்காக அவருக்கு Order of Australia விருதை வழங்கி ஆஸ்திரேலிய அரசு கவுரவித்தது.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்