ஆப்நகரம்

காய்கறி சாகுபடி.. கோவையில் விவசாயிகளுக்கு இலவச பயிற்சி!

காய்கறி சாகுபடி குறித்த இலவச பயிற்சி கோவையில் நாளை நடைபெறுகிறது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 24 Mar 2023, 11:33 am
தைவானில் உள்ள உலக காய்கறி மையம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் மற்றும் ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் காய்கறி விவசாயிகளுக்கான இலவச பயிற்சி கோயம்புத்தூர் மாவட்டத்தில் நாளை (மார்ச் 25ஆம் தேதி) நடைபெற உள்ளது.
Samayam Tamil vegetables


செம்மேட்டில் உள்ள ஈஷா இயற்கை விவசாய பண்ணையில் நடைபெறும் இப்பயிற்சியில் ரசாயனங்களை பயன்படுத்தாமல் இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் வழிமுறைகள் குறித்து வேளாண் வல்லுநர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர்.

குறிப்பாக, காய்கறி சாகுபடியில் பூச்சி நோய் மேலாண்மை செய்வது, பல பயிர் சாகுபடி மூலம் வருவானத்தை அதிகரிக்கும் வழிமுறைகள், பூச்சிக் கொல்லிகளின் செலவில்லாத விவசாய வழிமுறைகள், வரப்பு பயிர்களின் பயன்கள், பூச்சிகளை கட்டுப்படுத்தும் புதிய உத்திகள் என பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு கற்றுக் கொடுக்கப்பட உள்ளது.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் இயக்குநர்கள், பேராசிரியர்கள், முன்னோடி விவசாயிகள் பங்கேற்று ஆலோசனைகள் வழங்க உள்ளனர். மேலும், மண் காப்போம் இயக்கத்தின் பயிற்சியாளர்கள் மாதிரி பண்ணையை விவசாயிகளுக்கு சுற்றி காண்பித்து பல்வேறு விவசாய தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளிக்க உள்ளனர்.

மார்ச் 25ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த இலவச பயிற்சியில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் 83000 93777, 94425 90077 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈஷா அறக்கட்டளையின் மண் காப்போம் இயக்கம் சார்பாக இதுபோன்ற விவசாயிகளுக்கான நிறைய நிகழ்ச்சிகளும் பயிற்சிகளும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

உலக வன தினமான மார்ச் 21ஆம் தேதியன்று சத்குருவால் தொடங்கப்பட்ட காவேரி கூக்குரல் இயக்கம் தமிழ்நாட்டில் நடப்பு நிதியாண்டில் (2022-2023) ஒரு கோடிமரக்கன்றுகளை விவசாயிகளின் பங்களிப்புடன் அவர்களின் நிலங்களில் நடவு செய்து சாதனை படைத்தது.

இதுவரை 8.4 கோடி மரக்கன்றுகளை விவசாயிகளின் பங்களிப்போடு நடவு செய்துள்ளதோடு, சுமார் 1,68,000 விவசாயிகள் மரம் சார்ந்த விவசாயம் பற்றி தெரிந்துகொண்டு, அவர்களது நிலத்தில் மரங்களை நடவு செய்துள்ளனர். குறிப்பாக, மரம் சார்ந்த விவசாயம் மூலம் காவேரி நதியை மீட்டெடுப்பதற்காகவும், அதைச் சார்ந்துள்ள லட்சக்கணக்கான
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் காவேரி கூக்குரல் இயக்கம் தொடங்கப்பட்டது.

இவ்வியக்கத்தின் மூலம் நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டில் ஒரு கோடி மரக்கன்றுகளை விவசாய நிலங்களில் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கு மார்ச் 20ஆம் தேதி எட்டப்பட்டது. இந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 1.30 கோடி மரக் கன்றுகள் விவசாய நிலத்தில் நடவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்