ஆப்நகரம்

சீன பொருட்களின் லிஸ்ட் குடுங்க... மத்திய அரசு அதிரடி!

சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களின் பட்டியலை சமர்ப்பிக்கும்படி மத்திய அரசு கேட்டுள்ளது.

Samayam Tamil 20 Jun 2020, 6:12 pm
மே மாதம் முதல் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எல்லைப் பிரச்சினை நிலவிவந்த சூழலில் ஜூன் 15ஆம் தேதியன்று இரு ராணுவத்தினரும் மோதிக்கொண்டதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டுமென பல தரப்புகளில் கோரிக்கை எழுந்துள்ளது.
Samayam Tamil சீன பொருட்கள் இறக்குமதி


சீன உபகரணங்களை பயன்படுத்தப்போவதில்லை என இந்திய ரயில்வே துறையும், பிஎஸ்என்எல் நிறுவனமும் முடிவு செய்துள்ளன. மேலும், உ.பி மாநிலத்தில் ரயில்வே பணிகளுக்காக சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதை குறைக்க வேண்டுமெனவும், அதற்கேற்ப இந்திய நிறுவனங்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டுமெனவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மறைமுகமாக தெரிவித்துள்ளார். சீனாவுடனான பிரச்சினை குறித்து பிரதமர் மோடி தலைமையில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், சீனா விவகாரத்தில் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்பதாக தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். மேலும், சீன வீரர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவவில்லை எனவும், இந்திய வீரர்களும் சீன எல்லைக்குள் ஊடுருவவில்லை எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்நிலையில், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களின் பட்டியலையும் சமர்ப்பிக்கும்படி தொழில்துறையிடம் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதன்படி, சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களில் அத்தியாவசியப் பொருட்கள், அத்தியாவசியமற்ற பொருட்கள் பிரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியை மட்டும் தொடர்ந்து மேற்கொண்டு, அத்தியாவசியமற்ற பொருட்களை உள்நாட்டு நிறுவனங்களை வைத்தே உற்பத்தி செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக வாகனங்கள், மருந்துகள், பிளாஸ்டிக் பொருட்கள், மரச்சாமான்கள் முதல் பொம்மைகள் வரை சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களின் பட்டியலை சமர்ப்பிக்கும்படி வர்த்தக சங்கங்களிடம் மத்திய தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்