ஆப்நகரம்

Old Pension Scheme: முதல் கையெழுத்தே அதுதான்.. முதல்வர் அறிவிப்பால் அரசு ஊழியர்கள் ஹேப்பி!!

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டம் எப்போது?

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 14 Dec 2022, 8:19 am
தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே பழைய பென்சன் திட்டத்தைக் கொண்டு வருவேன் என்று இமாசலப் பிரதேச மாநில முதல்வர் உறுதியளித்துள்ளார்.
Samayam Tamil govt employees of this state finally got their old pension scheme back when will in tamilnadu
Old Pension Scheme: முதல் கையெழுத்தே அதுதான்.. முதல்வர் அறிவிப்பால் அரசு ஊழியர்கள் ஹேப்பி!!


​பழைய பென்சன் திட்டம்!

இந்தியா முழுவதும் உள்ள அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைகளில் மிக முக்கியமான ஒன்று பழைய பென்சன் திட்டம். தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது நடைமுறையில் உள்ள CPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ஊழியர்களுக்கு ஏற்றதாக இல்லை எனவும் இதில் இழப்புகள் அதிகம் எனவும் கூறப்படுகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்கள் இத்திட்டத்தை அமல்படுத்தக் கோரி வலியுறுத்தி வருகின்றன.

​தொடரும் போராட்டம்!

இந்தியாவில் தற்போது ஒரு சில மாநிலங்கள் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தியுள்ள நிலையில் அந்த வரிசையில் கடைசியாக பஞ்சாப் மாநிலமும் இணைந்தது. ஜார்கண்ட், சத்தீஷ்கர் மாநிலங்களில் கூட அமல்படுத்தப்பட்டுவிட்டது. இதனால் மற்ற மாநில அரசுகளும் இத்திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

​இமாசலப் பிரதேசம்!

நீண்ட கோரிக்கைகளுக்கு மத்தியில் இமாசலப் பிரதேச மாநிலத்தில் பழைய பென்சன் திட்டம் அமலாவது உறுதியாகியுள்ளது. இமாசலப் பிரதேசத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள காங்கிரஸ் தலைவர் சுக்விந்தர்சிங் சுகு, தமது மாநிலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். தான் பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான கையெழுத்து போடப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

​சாத்தியமான ஒன்றுதான்!

இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது சாத்தியமற்ற ஒன்று என்ற பிம்பம் இருந்தது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை எந்த காலத்திலும் செயல்படுத்த முடியாது எனவும், நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகவும் பொருளாதார வல்லுநர்கள் பலர் கூறி வந்தனர். தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூட நிதிச் சுமையைக் காரணம் காட்டியிருந்தார். ஆனால் இந்தப் பிரச்சினைகளையெல்லாம் ஒரு புறம் இருக்க ராஜஸ்தான் மாநிலம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தியது.

​அடுத்தடுத்து வெற்றி!

ராஜஸ்தான் மாநிலத்தைத் தொடர்ந்து சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப், இந்த மாநிலங்களுக்கு முன்பே மேற்கு வங்கம் என 5 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ஆறாவது மாநிலமாக இமாசலப் பிரதேசம் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. அடுத்து வரும் காலங்களில் இன்னும் சில மாநிலங்களும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வாய்ப்பு உள்ளது.

​தேர்தல் வாக்குறுதி!

இமாசலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படியே ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் முதல் அறிவிப்பாக பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்திருக்கிறது. ஆனால் திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவதாக உறுதியளித்துவிட்டு, இப்போது காரணம் கூறி தட்டிக் கழிப்பதாக CPS ஒழிப்பு அமைப்பினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

​தமிழ்நாட்டில் எப்போது?

வாக்குறுதியே அளிக்காத மாநிலங்கள் கூட பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்திவிட்ட நிலையில், வாக்குறுதி கொடுக்கப்பட்ட தமிழ்நாட்டில் எப்போது இத்திட்டம் அமலாகும் என்று தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவும் பழைய ஓய்வூதியத் திட்ட வாக்குறுதியை அளித்திருந்தது. ஆனால், அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்தியாவின் 6 மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்படும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழ்நாட்டில் ஏன் செயல்படுத்த முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர்களும் பல்வேறு அரசியல் தலைவர்களும் கேள்வி எழுப்புகின்றனர்.

காத்திருக்கும் ஊழியர்கள்!

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடுதான் நாட்டிற்கே முன்னோடியாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அந்த வாய்ப்பை தமிழகம் இழந்து விட்டது. இதுவரை நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், இனியாவது தாமதிக்காமல் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். தமிழக அரசு ஊழியர்களும் அந்த நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்