ஆப்நகரம்

ஜிஎஸ்டி வசூல்: பட்ஜெட் நாளில் நல்ல செய்தி!

ஜனவரி மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் ரூ.1.38 லட்சம் கோடி கிடைத்துள்ளது.

Samayam Tamil 1 Feb 2022, 8:22 am
நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையை அமல்படுத்தும் நோக்கத்தில் 2017ஆம் ஆண்டின் ஜூலை மாதம் 1ஆம் தேதி புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டியின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் வரி வசூல் செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்தது. ஆனால் இந்த இலக்கை அடைவது ஒவ்வொரு மாதமும் பெரும் சிரமமாக இருந்து வந்தது. அதுவும் கொரோனா வந்த பிறகு நிலைமை இன்னும் மோசமாகியது. எனினும், அக்டோபர் - டிசம்பர் மாதங்களில் வரி வசூல் இலக்கை விட அதிகமாகவே இருந்தது.
Samayam Tamil gst collection


இந்நிலையில், 2022 ஜனவரி மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் விவரங்களை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டது. அதன்படி, அதன்படி, மொத்தம் ரூ.1,38,394 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து நான்காவது மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.30 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. 2022 ஜனவரி மாத வசூலானது 2021 ஜனவரி மாத வசூலை விட 15 சதவீதமும், 2020 ஜனவரி மாத வசூலை விட 25 சதவீதமும் அதிகமாகும்.

2022 ஜனவரி மாத ஜிஎஸ்டி வசூலில், மத்திய ஜிஎஸ்டியாக ரூ.24,674 கோடியும், மாநில ஜிஎஸ்டியாக ரூ.32,016 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக ரூ.72,030 கோடியும் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதில் இறக்குமதி வாயிலாக ரூ.35,016 கோடி கிடைத்துள்ளது. இதுதவிர செஸ் வரியாக ரூ.9,674 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.

வரி ஏய்ப்புக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள், பொருளாதார வளர்ச்சி போன்ற காரணங்களால் ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-23 மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் சமயத்தில் ஜிஎஸ்டி வசூல் அதிகரித்திருப்பது அரசு தரப்பில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்