ஆப்நகரம்

ஜிஎஸ்டி வருமானத்தில் மண் அள்ளிப் போட்ட கொரோனா!

கொரோனா பாதிப்பால் ஆகஸ்ட் மாதத்தில் ரூ.86,449 கோடி மட்டுமே ஜிஎஸ்டி வருவாய் கிடைத்துள்ளது.

Samayam Tamil 1 Sep 2020, 9:46 pm
நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையைக் கொண்டு வரும் நோக்கத்தில் 2017ஆம் ஆண்டின் ஜூலை மாதம் 1ஆம் தேதி புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மத்திய மோடி அரசால் அமல்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டியின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் வரி வசூல் செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்தது. ஆனால் இந்த இலக்கை அடைவது ஒவ்வொரு மாதமும் பெரும் சிரமமாக இருந்து வருகிறது. கொரோனா வந்த பிறகு கடந்த ஆறு மாதங்களில் ஜிஎஸ்டி வரி வசூல் மேலும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. அரசின் இலக்கை அடைவதும் எட்டாக் கனியாக உள்ளது.
Samayam Tamil gst collection


ஆகஸ்ட் மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் விவரங்களை மத்திய நிதியமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, ரூ.86,449 கோடி மட்டுமே அந்த மாதத்தில் கிடைத்துள்ளது. இதில், மத்திய ஜிஎஸ்டி வரியாக ரூ.15,906 கோடியும், மாநில ஜிஎஸ்டி வரியாக ரூ.21,064 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக ரூ.42,264 கோடியும் கிடைத்துள்ளது. இதில் இறக்குமதி வாயிலாகக் கிடைத்த ரூ.19,179 கோடியும் அடக்கம். இதுதவிர செஸ் வரியாக ரூ.7,215 கோடி (இறக்குமதி வரி ரூ.673 கோடி உட்பட) வசூல் செய்யப்பட்டுள்ளது.

ஒரு நாடு ஒரு ரேஷன் திட்டம்: 26 மாநிலங்கள் இணைப்பு!

ஜிஎஸ்டி ரீஃபண்ட் தொகையில், மத்திய ஜிஎஸ்டியின் கீழ் ரூ.18,216 கோடியும், மாநில ஜிஎஸ்டியின் கீழ் ரூ.14,650 கோடியும் மத்திய அரசு வழங்கியுள்ளது. இவையெல்லாம் போக ஆகஸ்ட் மாதத்துக்கான அரசின் வரி வருவாய் மத்திய ஜிஎஸ்டியின் கீழ் ரூ.34,122 கோடியும், மாநில ஜிஎஸ்டியின் கீழ் ரூ.35,714 கோடியும் கிடைத்துள்ளது. 2019ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் வசூல் செய்யப்பட்ட தொகையில் வெறும் 88 சதவீதம் மட்டுமே இந்த ஆகஸ்ட் மாதத்தில் வசூலாகியுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜூலை மாதத்தில் ரூ.87,422 கோடி வசூல் செய்யப்பட்டிருந்தது.

ஜிஎஸ்டி வசூலில், தமிழகத்தில் 2020 ஆகஸ்ட் நிலவரப்படி மொத்தம் ரூ.5,243 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. 2019 ஆகஸ்ட் மாதம் இதன் அளவு ரூ.5,973 கோடியாக இருந்தது. இது 12 சதவீதம் வீழ்ச்சியாகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்