ஆப்நகரம்

சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. அதிகரிக்கும் PF சம்பள வரம்பு!

பிஎஃப் சம்பள வரம்புத் தொகையை 15,000 ரூபாயில் இருந்து 21,000 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 13 Apr 2024, 2:19 pm
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (PF) திட்டத்தின் கீழ் ஊதிய வரம்பை உயர்த்த அரசு ஆலோசித்து வருகிறது. தற்போது உள்ள 15,000 ரூபாயில் இருந்து ரூ.21,000 ஆக உயர்த்த மத்திய அரசு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக, இந்த வரம்பை கடந்த 2014ஆம் ஆண்டில் மத்திய அரசு உயர்த்தியது. அந்த சமயத்தில் PF ஊதிய வரம்பை 6500 ரூபாயில் இருந்து 15000 ரூபாயாக அரசு உயர்த்தியது. இந்நிலையில் தற்போது ஊதிய வரம்பு மேலும் உயர்த்தப்பட்டால் அதன் மூலம் லட்சக்கணக்கான சம்பளதாரர்கள் பயனடைவார்கள்.
Samayam Tamil pf wage limit


கடந்த பல ஆண்டுகளாக PF ஊதிய வரம்பை உயர்த்துவதற்கான முன்மொழிவு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது இந்த திட்டம் மறுபரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அனைத்து விருப்பங்களும் மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான முடிவை புதிதாக ஆட்சி அமைக்கும் அரசு எடுக்க வாய்ப்பு உள்ளது.

அதிகமான ஊழியர்களை சமூக பாதுகாப்பு வரம்பிற்குள் கொண்டு வர மத்திய அரசு விரும்பினால் இந்த முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஊதிய வரம்பு உயர்வால் லட்சக்கணக்கான ஊழியர்கள் பயனடைவார்கள். பெரும்பாலான மாநிலங்களில் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 18000 முதல் ரூ. 25000 வரை உள்ளது. இந்த முன்மொழிவை செயல்படுத்துவது PF திட்டம் மற்றும் தொழிலாளர் ஓய்வூதியத் திட்டத்தில் (EPS) செய்யப்பட்ட பங்களிப்பு தொகையிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

ஓய்வு பெறும் போது ஊழியர் பெறும் ஓய்வூதியத்தையும் இது பாதிக்கும். சம்பள வரம்பு ரூ.21,000 ஆக உயர்த்தப்பட்டால் EPF மற்றும் EPS பங்களிப்பில் அதன் தாக்கம் இருக்கும். தற்போது, தொழிலாளர் ஓய்வூதியத் திட்ட (EPS) கணக்கிற்கான பங்களிப்பு மாதத்திற்கு ரூ.15,000 என்ற அடிப்படை சம்பளத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இதன் அடிப்படையில், தொழிலாளர்களின் சம்பளத்தில் பங்களிப்பாக ரூ.1800 பிடித்தம் செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில், EPS கணக்கில் அதிகபட்ச பங்களிப்பு மாதத்திற்கு ரூ. 1,250 மட்டுமே.


தொழிலாளர்கள் வழங்கும் முழு பங்களிப்பும் PF கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. ஆனால் முதலாளியின் பங்களிப்பில் 12 சதவீதத்தில் 8.33 சதவீதம் தொழிலாளர் ஓய்வூதியத் திட்டத்தில் (EPS) டெபாசிட் செய்யப்படுகிறது. மீதமுள்ள 3.67 சதவீத தொகை PF கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. இபிஎஃப் திட்டத்தின் கீழ் சம்பள வரம்பு அதிகரிப்பதால் ஓய்வுபெறும் போது பெறும் ஓய்வூதியமும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்