ஆப்நகரம்

புதிதாக 15,000 பேருக்கு வேலை... ஊரடங்கிலும் அசத்தும் ஹெச்சிஎல்!

புதிதாக 15,000 ஊழியர்களை பணியமர்த்தவுள்ளதாக ஹெச்சிஎல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 22 Jul 2020, 10:34 am
இந்த நிதியாண்டில் புதிதாக 15,000 பேரை வேலைக்கு எடுக்க ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு சுமார் 9,000 பேரை ஹெச்சிஎல் பணியமர்த்தியது.
Samayam Tamil ஹெச்சிஎல்


கொரோனா நெருக்கடியால் ஏராளமான நிறுவனங்கள் தொழிலை நடத்துவதில் பல சிக்கல்களை சந்தித்து வந்தன. இதற்கிடையே வருவாய், லாபம் சரிவு, நிதி நெருக்கடி என பல்வேறு சிக்கல்களில் மாட்டிக்கொண்டன. நெருக்கடியை சமாளிப்பதற்காக ஏராளமான நிறுவனங்கள் ஊழியர்களை வெளியேற்றின. பல நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்தை குறைத்தும், சம்பளம் இல்லா விடுப்பில் அனுப்பியும் செலவுகளை குறைக்க முயற்சித்தன.

தற்போது பொது முடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாலும், புதிய ஒப்பந்தங்கள் வந்துகொண்டு இருப்பதாலும், சந்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாலும் தற்போது சில துறைகளில் புதிய ஊழியர்கள் பணியமர்த்தப்படுவது அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்த நிதியாண்டில் 15,000 ஊழியர்களை பணியமர்த்த ஹெச்சிஎல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதுபற்றி ஹெச்சிஎல் நிறுவனத்தின் மனித வளத் துறை தலைசர் அப்பாராவ் பேசுகையில், “இரண்டு காரணிகளின் அடிப்படையில் புதிய ஊழியர்களை பணியமர்த்துகிறோம். வளர்ச்சி ஒரு காரணி. மற்றொன்று, தொய்வு. தொய்வை சரி செய்ய புதிய ஊழியர்களை பணியமர்த்தியே ஆக வேண்டும். கடந்த ஜூன் காலாண்டில் தொய்வு கணிசமாக குறைந்துள்ளது. ஆகவே, தொய்வை அடிப்படையாக கொண்ட பணியமர்த்தல் குறைவாகவே இருக்கும்.

கோவிட்-19 நெருக்கடியால் கல்லூரிகள் இயங்கவில்லை. இதனால் மாணவர்கள் பட்டப்படிப்பை முடிக்க இயலவில்லை. இதனால் ஆன்லைன் வாயிலாகவே நாங்கள் புதிய ஊழியர்களை பணியமர்த்தி வருகிறோம். ஜூன் காலாண்டில் 1,000 பேரை பணியமர்த்தியிருக்கிறோம். புதிய ஊழியர்களுக்கு (ஃப்ரெஷர்) கூட ஆண்டுக்கு ரூ.3.5 லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறது.

பொது முடக்கத்தால் பல ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை பார்க்கின்றனர். இருந்தாலும், ஜூன் காலாண்டில் உற்பத்தித் திறன் உயர்ந்துள்ளது. மொத்த ஊழியர்களில் 96 விழுக்காட்டினர் வீட்டில் இருந்துதான் வேலை செய்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்