ஆப்நகரம்

10 நிமிடத்தில் பான் கார்டு பெறுவது எப்படி?

வெறும் 10 நிமிடங்களில் பான் கார்டு பெறுவதற்கான வசதியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்தியுள்ளார்.

Samayam Tamil 31 May 2020, 8:14 pm
பான் கார்டு உடனடியாக பெறுவதற்கான வசதியை மே 28ஆம் தேதியன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்திவைத்தார். இதன்படி தற்போது ஆதார் கார்டு வைத்திருப்பவர்களும், ஆதார் கார்டுடன் மொபைல் எண்ணை இணைத்தவர்களும் உடனடியாக பான் கார்டுக்கு விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். முழுக்க முழுக்க ஆன்லைனிலேயே பான் கார்டுக்கு விண்ணப்பித்துவிடலாம்.
Samayam Tamil இ பான் கார்டு


உடனடியாக பான் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

* வருமான வரித் துறையின் இ-ஃபைலிங் இணையதளத்தில் விண்ணப்பதாரர் தனது ஆதார் எண்ணை வழங்க வேண்டும்.

* பின்னர், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி (OTP - One time password) அனுப்பப்படும்.

* இதை சரியாக முடித்தபிறகு 15 இலக்க ஒப்புதல் எண் வழங்கப்படும்.

* தேவைப்படும்போது தனது பான் கார்டு கோரிக்கையின் நிலவரம் என்னவென்பதை விண்ணப்பதாரர் தனது ஆதார் எண் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

* ஒப்புதல் வழங்கப்பட்ட பிறகு இ-பான் கார்டை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

* விண்ணப்பதாரரின் இமெயில் ஐடிக்கும் இ-பான் கார்டு அனுப்பப்படும். ஆதார் எண்ணுடன் பதிவு செய்யப்பட்ட இமெயில் ஐடிக்கு மட்டுமே இ-பான் அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திட்டம் சோதனை அடிப்படையில் ஏற்கெனவே பிப்ரவரி 12ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. அதன்பின்னர் 6,77,680 உடனடி பான் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. வெறும் 10 நிமிடங்களிலேயே பான் கார்டு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆக, ஊரடங்கு காலத்திலும் பான் கார்டு பெற விரும்புவோர் மேற்கூறிய வழிமுறையை பின்பற்றி உடனடியாக பான் கார்டு பெற்றுக்கொள்ளலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்