ஆப்நகரம்

வரி செலுத்தப் போறீங்களா? இதெல்லாம் கண்டிப்பா வேணும்!

இந்த ஐந்து ஆவணங்கள் கட்டாயம்!

Samayam Tamil 30 Nov 2020, 4:00 pm
2019-20 நிதியாண்டுக்கான வருமான வரியைத் தாக்கல் செய்வதற்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே அவகாசம் இருக்கிறது. அதற்குள் வரித் தாக்கல் செய்ய வேண்டியவர்கள் செய்துவிடலாம். வரி தாக்கல் செய்வதற்கு முன்பாக அதற்கு என்னென்ன ஆவணங்கள் கட்டாயம் தேவை என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்!
Samayam Tamil important documents required for itr filing
வரி செலுத்தப் போறீங்களா? இதெல்லாம் கண்டிப்பா வேணும்!



காலக்கெடு எப்போது?

இந்தியாவில் மார்ச் மாதம் முதலே கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருந்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனாவின் தீவிரத்தைக் கருத்தில்கொண்டு பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு காலமும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. இக்காலத்தில் வரி செலுத்துவது போன்ற செயல்பாடுகளில் சிக்கல் ஏற்பட்டதால் 2019-20ஆம் ஆண்டுக்கான வருமான வரியைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. வருமான வரித் துறை அறிவிப்பின்படி, நவம்பர் 30ஆம் தேதிக்குள் வருமான வரியைத் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் பல்வேறு காரணங்களால் இந்தத் தேதிக்குள் வரித் தாக்கல் செய்வதில் பலருக்கு சிரமம் இருப்பதைக் கருத்தில் கொண்டு, டிசம்பர் 31ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

FORM 16!

வருமான வரியைத் தாக்கல் செய்வதற்கு ஐந்து ஆவணங்கள் மிக மிக முக்கியமாகும். அவற்றில் பிரதானமானது form 16. சம்பளம் பெறும் அனைத்து தனிநபர்களுக்கும் form 16 கட்டாயமாகும். இதை வேலை கொடுக்கும் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வழங்குகின்றன. சம்பளத்தில் வருமான வரி பிடித்தம் செய்யப்படும் அனைத்து ஊழியர்களுக்கும் இந்த ஆவணம் வழங்கப்படுகிறது. வருமான வரி செலுத்தத் தேவையான ஆவணங்களிலேயே மிக முக்கியமான ஆவணம் இதுதான். இந்த ஆவணத்தில் பான் எண் மற்றும் வரி பிடித்த கணக்கு எண் ஆகியவை அடங்கியிருக்கும்.

Form 26AS!

form 16-ஐத் தொடர்ந்து மிக முக்கியமான ஆவணம் form 26AS ஆகும். வருமான வரித் துறையால் ஒரு வருட அடிப்படையில் உருவாக்கப்படும் வரிக் கணக்கு விவரம்தான் இந்த Form 26AS. இந்த ஆவணத்தை வரி செலுத்தும் அனைவரும் தங்களது பான் விவரத்தைக் கொண்டு வருமான வரித் துறையின் இணையப் பக்கத்தில் பெற முடியும். குறிப்பிட்ட நிதியாண்டில் வரி செலுத்துபவரின் டிடிஎஸ் தொகை மற்றும் செலுத்தப்பட்ட வரிகள் இந்த ஆவணத்தில் அடங்கியிருக்கும்.

மருத்துவக் காப்பீடு!

வருமான வரிச் சட்டம் 80D-இன் படி உங்களது மருத்துவக் காப்பீட்டுக்கான பிரீமியம் செலுத்திய தொகையை ரூ.25,000 வரையில் நீங்கள் கிளைம் செய்ய முடியும். அந்த மருத்துவக் காப்பீடு உங்களுடையதோ அல்லது உங்களது வாழ்க்கைத் துணையுடையதோ அல்லது உங்களது குழந்தைகளுடையதாகவோ இருக்கலாம். மூத்த குடிமக்களுக்கு இதற்கான வரம்புத் தொகை ரூ.50,000 ஆகும். உங்களது பெற்றோர்களுக்கான பிரீமியத்தை நீங்கள் செலுத்தினாலும் அதற்கும் நீங்கள் கிளைம் செய்யலாம். உங்களது பெற்றோர்களுக்கு 60 வயதை விடக் குறைவாக இருந்தால் நீங்கள் ரூ.25,000 வரை கிளைம் செய்யலாம்.

வட்டி வருவாய் சான்றிதழ்!

தனிநபர் ஒருவர் தனது சம்பளம் மட்டுமல்லாமல் இதர வழிகளிலும் சம்பாதிக்கிறார். அதாவது சேமிப்புக் கணக்கு, நிலையான வைப்புத் தொகை உள்ளிட்ட பல்வேறு மூலங்களில் இருந்து அவர்களுக்கு குறிப்பிட்ட வருமானம் வருகிறது. வங்கிகளிலிருந்தோ அல்லது தபால் அலுவலகங்களிலிருந்தோ அந்த வருமானம் வரலாம். இந்த வருமானத்துக்கான விவரங்கள் வங்கி அல்லது தபால் நிலையங்களிடமிருந்து தரப்படுகிறது. வருமான வரிச் சட்டம் 802TTA-இன் படி தனிநபர் ஒருவர் இதற்கான பிடித்தத் தொகையை கிளைம் செய்ய முடியும். (ரூ.10,000 வரையிலான வருமானத்துக்கு). இந்த ஆவணம்தான் வட்டி வருவாய்க்கான சான்றிதழ் ஆகும்.

வரி சேமிப்பு முதலீடு!

நிறுவனத்தின் பிடிக்கப்பட்ட வரிகளுக்கு கிளைம் செய்பவர்கள் அதற்கான வரி சேமிப்பு முதலீடுகள் குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அப்படி சமர்ப்பிக்கத் தவறியவர்கள் இதுகுறித்த விவரங்களை வருமான வரித் துறையிடம் குறிப்பிட்ட கால அளவில் சமர்ப்பிக்க வேண்டும். எல்.எஸ்.சி. பிரீமியம் செலுத்தியது, மெடிக்கல் இன்சூரன்ஸ், பி.பி.எஃப். பாஸ்புக், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள், வீட்டுக் கடன் செலுத்திய சான்றிதழ், அன்பளிப்புகள் வழங்கிய விவரம், டியூசன் கட்டணம் செலுத்தியது போன்றவை இதற்கு உதாரணங்கள் ஆகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்