ஆப்நகரம்

செல்வ மகள் சேமிப்புத் திட்டம்: உங்கள் மகளுக்கு ரூ.46 லட்சம் பரிசளிக்க ஒரு வாய்ப்பு!

தபால் நிலையத்தில் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் குறித்து இங்கே அறிந்து கொள்ளலாம்.

Samayam Tamil 21 Sep 2018, 5:03 pm
புதிதாக பிறந்த பெண் குழந்தையின் பெற்றோரா நீங்கள்? அப்படியென்றால் அவளது வாழ்க்கைக்கான பொருளாதார உத்தரவாதத்தை அளிக்க இதோ ஒரு சிறந்த வழி. இதற்கு தபால் நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட செல்வ மகள் சேமிப்புத் திட்டம் மிகச்சிறந்த உதாரணம் ஆகும். இந்த திட்டத்தை சுகன்யா சம்ரிதி யோஜனா என்று மத்திய அரசு அழைக்கிறது.
Samayam Tamil Savings Scheme


உங்கள் பெண் குழந்தைகளின் பெயரில் பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ இந்த சேமிப்புத் திட்டத்தைத் தொடங்கலாம். இந்திய தபால் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, ஒரு பெற்றோர் அதிகபட்சமாக இரு பெண் குழந்தைகளின் பெயரில் செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தைத் தொடங்கலாம். ஓராண்டில் குறைந்தபட்சம் ரூ.1,000 முதலீடு செய்யலாம்.

அதிகபட்சமாக ரூ.1,50,000 வரை முதலீடு செய்யலாம். தொடர்ச்சியான முதலீடுகள் ரூ.100ன் மடங்குகளாக இருக்க வேண்டும். ஒரு மாதத்திலோ அல்லது ஓராண்டிலோ முதலீடு செய்வதற்கான எண்ணிக்கை வரம்பு ஏதுமில்லை. தபால் நிலையங்களில் செல்வ மகள் திட்டத்தை, 10 வயதுக்கு குறைவான பெண் குழந்தைகளின் பெயரில் தொடங்கலாம்.

வட்டி விகிதம்:

தற்போது ஆண்டிற்கு 8.1% என்ற அளவில் வட்டி விகிதம் அளிக்கப்பட்டு வருகிறது. இது கடந்த 01-01-2018ல் இருந்து நடைமுறையில் இருக்கிறது.

இந்த சேமிப்புத் திட்டத்தை 14 ஆண்டுகள் வரை மட்டுமே தொடர முடியும். எனவே ஓராண்டிற்கு ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், 14 ஆண்டுகள் முடிவில் ரூ.14 லட்சம் ஆகிறது. 21 ஆண்டுகளுக்குப் பின், வட்டி சேர்க்கப்பட்டு ரூ.46 லட்சமாக திரும்பக் கிடைக்கிறது. இதேபோல் ஆண்டிற்கு ரூ.50,000 என 14 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், இறுதியாக ரூ.23 லட்சமாக திரும்பக் கிடைக்கிறது.

அபராதம்:

குறைந்தபட்சம் ரூ.1000 முதலீடு செய்யத் தவறினால், சேமிப்புக் கணக்கு செயலிழந்து விடும். எனவே குறைந்தபட்சத் தொகையுடன் ஆண்டிற்கு ரூ.50 அபராதம் செலுத்தி, மீண்டும் செயல்படச் செய்து கொள்ளலாம்.

பாதியில் திரும்பப் பெறல்:

செலவிற்கு இடையில் பணம் தேவைப்பட்டால், பெண் குழந்தை 18 வயதாகும் போது, ஒட்டுமொத்தத் தொகையில் 50% சேமிப்பைப் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு 18 வயது நிரம்பியதற்கான சான்று அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் அளிக்க வேண்டும்.

கணக்கை பாதியில் மூடல்:

பெண் குழந்தைக்கு 18 வயது ஆனாலோ அல்லது திருமணம் ஆகிவிட்டாலோ சேமிப்பு கணக்கை மூடிவிடலாம்.

Invest Rs 14 lakh, gift your daughter Rs 46 lakh in Post Office Sukanya Samriddhi Yojana.

அடுத்த செய்தி

டிரெண்டிங்