ஆப்நகரம்

பெண்களுக்கான சிறப்பு சேமிப்பு திட்டம்.. முதலீடு குறைவு.. வருமானம் அதிகம்!

தபால் நிலையங்களில் உள்ள மகளிர் மதிப்புத் திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 10 Apr 2023, 9:44 pm
மகளிர் மதிப்புத் திட்டம் (MSSC) என்பது மத்திய அரசின் நிதி அமைச்சகத்தால் தொடங்கப்பட்டு, பெண் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டுள்ள ஒரு புதிய சிறு சேமிப்புத் திட்டமாகும். 75ஆவது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவினை குறிக்கும் வகையில் 2023ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் இந்தத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது,
Samayam Tamil savings


இது பெண் குழந்தைகள் உட்பட பெண்களுக்கான நிதி ஆதாரம் மற்றும் அதிகாரமளிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க திட்டமாகும். பெண் குழந்தை அல்லது தனிப்பட்ட பெண் நபரின் பெயரில் தொகையை முதலீடு செய்யலாம். இக்கணக்கை 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகள் தகுந்த பாதுகாவலர் மூலம் திறந்து கொள்ளலாம்.

குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ. 1,000 மற்றும் அதிகபட்ச தொகை ரூ. 2 லட்சம். கணக்கைத் தொடங்கிய நாளிலிருந்து இரண்டு ஆண்டுகளில் இத்திட்டம் முதிர்வடையும். மகளிர் மதிப்புத் திட்டத்துக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.5 சதவீதமாக உள்ளது. கூட்டு வட்டி விகிதத்தில் காலாண்டு தோறும் கணக்கிடப்படும். இத்திட்டம், 2023 ஏப்ரல் 1 முதல் 2025 மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில் செயல்முறையில் இருக்கும்.

கணக்கைத் தொடங்கிய நாளிலிருந்து ஒரு வருடம் நிறைவடையும் போது 40 சதவீதம் வரை மீதத் தொகையில் திரும்பப் பெற அனுமதிக்கப்படும். கணக்கு வைத்திருப்போர் அல்லது பாதுகாவலரின் மரணம் மற்றும் தீவிர மருத்துவ காரணங்களால் இக்கணக்கை முடித்துக் கொள்ளலாம். கணக்கு துவங்கிய ஆறு மாதங்களுக்குப் பிறகு எந்த நேரத்திலும் கணக்கை முன்கூட்டியே முடித்துக் கொள்ளலாம். ஆனால், அவ்வாறு முடித்து கொள்ளும் பட்சத்தில் வட்டி விகிதம் 2 சதவீதம் குறைக்கப்படும்.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் நலனுக்காக பிரத்யேகமாக தொடங்கப்பட்டுள்ள இந்த வாய்ப்பை அருகில் உள்ள தபால் நிலையங்களை அணுகி பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழ்நாடு அஞ்சல் வட்டம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, https://www.indiapost.gov.in என்ற முகவரியைப் பார்வையிடலாம். சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தைப் போலவே இந்தத் திட்டமும் பெண்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்