ஆப்நகரம்

Cognizant Layoff May 2023 : ஐடி நிறுவனம் காக்னிசண்ட் 3500 பேரை வேலையை விட்டு நீக்குவதாக அறிவிப்பு!

Cognizant layoff 3500 employees: பிரபல ஐடி நிறுவனமான காக்னிசண்ட் 3500 பேரை வேலையை விட்டு நீக்குவதாக அறிவித்துள்ளது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 4 May 2023, 12:51 pm
இந்தியா மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் கடந்த சில மாதங்களாகவே பணி நீக்கம் தொடர்பான செய்திகள் அதிகமாக உள்ளன. பல்வேறு துறையைச் சார்ந்த பிரபல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களைக் கொத்துக் கொத்தாக வேலையை விட்டு நீக்கி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் நிறுவனங்களில் பணி நீக்கம் என்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இந்த முறை வழக்கத்துக்காக மாறாக, நிறைய நிறுவனங்கள் பல ஆயிரக்கணக்கான ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளன; செய்தும் வருகின்றன.
Samayam Tamil layoff


ஊழியர்களைப் பெரிய அளவில் பணிநீக்கம் செய்த நிறுவனங்களில் காக்னிசண்ட் நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் தற்போது அடுத்த கட்ட பணி நீக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த முறை சுமார் 3,500 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஐடி நிறுவனமான காக்னிசண்ட் சில அலுவலகங்களையும் இழுத்து மூட முடிவு செய்துள்ளது. செலவுகளைக் குறைக்கும் நோக்கத்தில்தான் இந்த அதிரடி நடவடிக்கையில் காக்னிசண்ட் நிறுவனம் இறங்கியுள்ளது.

இந்த 2023ஆம் ஆண்டில் காக்னிசண்ட் நிறுவனத்தின் வருவாய் மேலும் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில் செலவுகளைக் குறைக்கும் நோக்கத்தில் காக்னிசண்ட் நிறுவனம் பெரிய அளவிலான பணி நீக்கத்தை அறிவித்துள்ளது. அடுத்து வரும் மாதங்களில் இன்னும் அதிகப் பேர் வேலையை விட்டு நீக்கப்பட வாய்ப்பு உள்ளது. நிறுவனத்தின் லாபம் மற்றும் பொருளாதாரச் சூழலைப் பொறுத்து அது இருக்கும் என்று கருதப்படுகிறது.

பொருளாதார மந்தநிலை, நிறுவனத்தின் வருவாய் குறைவு போன்ற காரணங்களால் அலுவலகங்களை மூடவும், ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யவும் காக்னிசண்ட் நிறுவனத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சென்ற மார்ச் மாதத்தில் காக்னிசண்ட் நிறுவனத்தின் நிகர லாபம் 3 சதவீதம் உயர்ந்து 580 மில்லியன் டாலராக இருந்தது. ஆனால், ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் 0.3 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டது. இந்த காலகட்டத்தில் 4.81 பில்லியன் டாலர் மட்டுமே லாபம் கிடைத்துள்ளது.

சமீபத்தில்தான் பிரபல ஐடி நிறுவனமான அக்கெஞ்சர் சுமார் 19,000 பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து தற்போது காக்னிசண்ட் நிறுவனமும் பணி நீக்கம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அடுத்த எந்த நிறுவனத்தில் பணி நீக்கம் இருக்குமோ என்ற அச்சத்தில் ஐடி ஊழியர்கள் உள்ளனர்.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்