ஆப்நகரம்

பால் விலை உயர்வு எதிரொலி.. வாங்குவதை நிறுத்தும் இந்தியர்கள்!

இந்தியாவில் பால் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நிறையப் பேர் பால் வாங்குவதையே நிறுத்திவிட்டதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 7 Feb 2023, 3:01 pm
நமது அன்றாட வாழ்க்கையில் பால் என்பது மிகவும் அத்தியாவசியமான உணவுப் பொருளாக உள்ளது. பால், தயிர், மோர், காபி, நெய், வெண்ணெய் என ஏதேனும் ஒரு வடிவத்தில் அனைவரும் பாலை உட்கொள்கின்றனர். மிக முக்கியமாக குழந்தைகளின் பிரதான உணவாகப் பால் உள்ளது. இந்த பால் விலை உயர்த்தப்படும்போது அது பொதுமக்களை நேரடியாகப் பாதிக்கிறது. தினசரி குடும்பச் செலவுகளில் பால் விலை உயர்வு பெரும் நெருக்கடியைத் தருவதாக உள்ளது.
Samayam Tamil milk


இந்தியாவில் இப்போது பால் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. உற்பத்திச் செலவுகள், விவசாயிகள் நலன் போன்ற பல்வேறு காரணங்களுக்காகப் பால் விலை உயர்த்தப்படுவதால் மறுபக்கம் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. கடந்த சில மாதங்களில் அமுல் உள்ளிட்ட நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு பால் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளன. இதனால் நிறையப் பேர் பாலின் அளவைக் குறைத்துள்ளனர். அதாவது, இரண்டு பாக்கெட் வாங்குவதற்குப் பதிலாக ஒரு பாக்கெட் வாங்குவது என்ற நிலைக்கு வந்துவிட்டனர். இன்னும் நிறையப் பேர் பால் வாங்குவதையே நிறுத்திவிட்டதாகத் தெரிகிறது.

இந்நிலையில் பால் விலை உயர்வு குறித்து லோக்கல் சர்க்கிள் நிறுவனம் சார்பாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வில், இந்தியாவில் சராசரியாக பத்துக்கு 4 குடும்பங்கள் பால் வாங்குவதை நிறுத்திவிட்டதாக இந்த ஆய்வின் மூலமாகத் தெரியவந்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் அமுல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பால் விலையை 2 முதல் 5 முறை உயர்த்தியுள்ளன. ஒவ்வொரு முறையும் பால் விலை 1 முதல் 3 ரூபாய் வரையில் உயர்த்தப்பட்டது. கடைசியாக அமுல் நிறுவனம் பால் விலையை 3 ரூபாய் உயர்த்தியது. கடந்த 12 மாதங்களில் மட்டும் பால் விலை ஒட்டுமொத்தமாக 12 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த 10 ரூபாய் நோட்டு உங்க கிட்ட இருக்கா? பல லட்சம் கிடைக்கும்!

இந்தியாவைப் பொறுத்தவரையில், பால் உற்பத்தி மற்றும் நுகர்வில் சர்வதேச அளவில் முன்னிலையில் இருக்கிறது. இந்தியாவில் தனிநபர் பால் நுகர்வு நாள் ஒன்றுக்கு 406 கிராம் என்ற அளவில் உள்ளது. அதேநேரம் சர்வதேச சராசரி நாள் ஒன்றுக்கு 305 கிராமாக உள்ளது. இதன் மூலம் பால் என்பது இந்தியாவில் தவிர்க்க முடியாத ஒரு உணவுப் பொருளாக இருப்பதைப் பார்க்க முடிகிறது.

பால் விலை உயர்வு தொடர்பான இந்த புள்ளி விவரங்களுக்காக இந்தியாவில் 303 மாவட்டங்களில் சுமார் 10,000 பேரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. இதில் 64 சதவீதத்தினர் ஆண்களாவர். எஞ்சிய 36 சதவீதம் பெண்கள். நகர வாரியாகப் பார்த்தால் ஆய்வில் பங்கேற்றவர்களில் 45 சதவீதத்தினர் முதல் அடுக்கு நகரத்தை சேர்ந்தவர்கள். மேலும், 33 சதவீத்தினர் இரண்டாம் அடுக்கு நகரத்தையும், 22 சதவீத்தினர் மூன்றாம் மற்றும் நான்காம் அடுக்கு நகரங்களையும் சேர்ந்தவர்கள்.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்