ஆப்நகரம்

Dolo 650: மாத்திரையை கொடுக்க மருத்துவர்களுக்கு லஞ்சம்.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

டோலோ 650 மாத்திரையை நோயாளிகளுக்கு வழங்க மருத்துவர்களுக்கு இலவசங்கள் அள்ளி வழங்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்திடம் தகவல்.

Samayam Tamil 19 Aug 2022, 12:33 pm
கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது டோலோ 650 மாத்திரை (Dolo 650) ட்ரெண்டானது. ஏனெனில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஏராளமானவர்கள் டோலோ 650 மாத்திரையே வாங்கி சாப்பிட்டனர். லேசாக கொரோனா அறிகுறி இருந்தாலும் டோலோ 650 மாத்திரையைதான் பலரும் சாப்பிட்டனர்.
Samayam Tamil dolo 650


இந்நிலையில், டோலோ 650 மாத்திரை தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. டோலோ 650 மாத்திரையை மைக்ரோ லேப்ஸ் (Micro Labs) என்ற நிறுவனம் உற்பத்தி செய்கிறது. மைக்ரோ லேப்ஸ் நிறுவனம் டோலோ 650 மாத்திரையை நோயாளிகளுக்கு பரிந்துரைப்பதற்காக மருத்துவர்களுக்கு சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான இலவசங்களை வழங்கியுள்ளதாக உச்ச நீதிமன்றத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ விற்பனையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மருத்துவ துறையில் பரவிக் கிடக்கும் ஊழல், மருத்துவர்களுக்கு வழங்கப்படும் இலவசங்கள், இதை கட்டுப்படுத்துவதற்கு தேவையான விதிமுறைகள் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

நீங்களே இப்படி பண்ணலாமா.. ஃப்ளிப்கார்ட் நிறுவனத்துக்கு 1 லட்சம் அபராதம்!
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டோலோ 650 மாத்திரையை நோயாளிகளுக்கு பரிந்துரைப்பதற்காக மைக்ரோ லேப்ஸ் நிறுவனம் மருத்துவர்களுக்கு சுமார் 1000 கோடி ரூபாய்க்கு இலவசங்களை அள்ளி வழங்கியுள்ளதாக உச்ச நீதிமன்றத்திடம் இந்திய மருத்துவ விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கு சான்றாக மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (CBDT) அறிக்கையையும் உச்ச நீதிமன்றத்திடம் சுட்டிக்காட்டியது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி சந்திரசூட், “நீங்கள் சொல்வது எனக்கு நல்லதாக படவில்லை. எனக்கு கொரோனா வந்தபோது கூட இதே மருந்தைதான் சாப்பிட்டேன்” என்று கூறினார்.

இதுபோல மருத்துவர்களுக்கு இலவசங்களை வழங்குவதை தடுக்க தற்போது சட்டத்தில் கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. மேலும் மருந்துகளின் விலையை நிர்ணயிப்பதிலும் சிக்கல்கள் இருக்கின்றன என நீதிபதிகளிடம் இந்திய மருத்துவ விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்தது.

இதையடுத்து, இவ்விவகாரம் குறித்து 10 நாட்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது ஒரு மிக முக்கியமான பிரச்சினை எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்