ஆப்நகரம்

இலவச சிலிண்டர் திட்டம் 2.0... மோடி தொடங்கி வைக்கிறார்!

உஜ்வாலா 2.0 திட்டத்தை ஆகஸ்ட் 10ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

Samayam Tamil 8 Aug 2021, 8:42 pm
நாட்டிலுள்ள வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 5 கோடி பெண் உறுப்பினர்களுக்கு சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்குவதை இலக்காகக் கொண்டு மத்திய அரசின் உஜ்வாலா யோஜனா திட்டம் 2016ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் தொடர்ச்சியாக, 2018 ஏப்ரல் மாதத்தில் கூடுதலாக ஏழு பிரிவுகளை (பட்டியலின/பட்டியல் பழங்குடி, பிரதமரின் ஆவாஸ் யோஜனா, அந்தியோதயா அன்ன யோஜனா, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுகள், தேயிலை தோட்டம், வனப் பகுதிகளில் வசிப்பவர்கள், தீவுகள்) சேர்ந்த பெண்களுக்கும் இந்தத் திட்டத்தின் பயன்கள் நீட்டிக்கப்பட்டது.
Samayam Tamil modi


இத்திட்டத்துக்கான இலக்கும் 8 கோடி சமையல் எரிவாயு இணைப்புகளாக மாற்றியமைக்கப்பட்டது. இந்த இலக்கு 2019 ஆகஸ்ட் மாதத்திலேயே எட்டப்பட்டுவிட்டது. 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில், பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் கூடுதலாக ஒரு கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் முதற்கட்டத்தில் கொண்டுவரப்படாத குறைந்த வருமானம் உடைய குடும்பங்களுக்கு வைப்புத்தொகை இல்லாமல் கூடுதலாக ஒரு கோடி சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்க அரசு திட்டமிட்டது.

அதன்படி, தற்போது உஜ்வாலா 2.0 திட்டம் தொடங்கப்படுகிறது. ஆகஸ்ட் 10ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலத்தின் மஹோபாவில் சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்கி, உஜ்வாலா 2.0 திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறார். பிற்பகல் 12:30 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுவதோடு, நாட்டு மக்களுக்கும் உரையாற்றுவார் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்