ஆப்நகரம்

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... ஜாம்பவான்களுடன் போட்டி போடும் ஓலா!

எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி துறையில் பெருநிறுவனங்களுடன் போட்டி போடும் வகையில் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த எடெர்கோ நிறுவனத்தை ஓலா விலைக்கு வாங்கியுள்ளது.

Samayam Tamil 28 May 2020, 3:14 pm
நெதார்லாந்து நாட்டைச் சேர்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி நிறுவனமான எடெர்கோவை ஓலா நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது. எனினும், என்ன தொகைக்கு எடெர்கோ நிறுவனத்தை வாங்கியது என்பது பற்றிய தகவல்களை ஓலா நிறுவனம் வெளியிடவில்லை. இந்தியாவில் 2021ஆம் ஆண்டில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை அறிமுகப்படுத்த ஏற்கெனவே ஓலா திட்டமிட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக தற்போது எடெர்கோவை விலைக்கு வாங்கியுள்ளது.
Samayam Tamil ஓலா எலெக்ட்ரிக்


இதன் மூலம் எலெக்ட்ரிக் வாகன துறையில் ஹீரோ, பஜாஜ் போன்ற ஜாம்பவான்களுடனும், ஏதெர் எனெர்ஜி போன்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடனும், சீன நிறுவனங்களுடனும் போட்டியிட ஓலா திட்டமிட்டுள்ளது. எடெர்கோ நிறுவனம் வடிவமைத்துள்ள் ஆப்ஸ்கூட்டர் வாகனம் அதிக திறன் கொண்ட பேட்டரியுடன் 240 கிலோமீட்டர் வரை பயணிக்கக்கூடியது என ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்களுக்காக நாடு முழுவதும் சார்ஜிங் நிலையங்கள், பேட்டரி மாற்றும் நிலையங்களை ஓலா நிறுவனம் ஏற்கெனவே அமைக்கத் தொடங்கிவிட்டது. சர்வதேச இரு சக்கர வாகன சந்தையின் அளவு 10 கோடி யூனிட்கள் எனவும், இந்திய சந்தையின் அளவு 2 கோடி யூனிட்கள் எனவும் ஓலா நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து ஓலா நிறுவனத்தின் துணை நிறுவனர் பாவிஷ் அகர்வால், “உலகம் முழுக்க ஒவ்வொரு ஆண்டும் விற்பனையாகும் கார்களை காட்டிலும் இருசக்கர வாகனங்கள் இருமடங்கு விற்பனையாகின்றன. டிஜிட்டல் இணைப்பு, எலெக்ட்ரிக் இயக்கம் போன்றவற்றால் உலகம் முழுக்க நகர்ப்புற மக்கள் இருசக்கர வாகனங்களில் அதிக ஆர்வம் காட்டுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

ஓலா நிறுவனத்தில் கடந்த ஆண்டில் சாஃப்ட்பேங்க் 25 கோடி டாலர் முதலீடு செய்தது. இதைத்தொடர்ந்து ஓலா நிறுவனத்தின் மதிப்பு 100 கோடி டாலராக உயர்ந்தது. கேப் சேவைகளை மேற்கொண்டு வந்த ஓலா நிறுவனம் திடீரென வாகன உற்பத்தியில் களமிறங்கத் திட்டமிட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்