ஆப்நகரம்

உங்களுக்கெல்லாம் பென்சன் கிடையாது.. குண்டை தூக்கிப் போட்ட PF அமைப்பு!

பென்சன் வாங்கும் சில பிரிவினருக்கான பென்சன் தொகையை பிஎஃப் அமைப்பு நிறுத்தியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 28 Mar 2023, 12:04 pm
பென்சன் வாங்குவோர் அதிக பென்சன் பெறும் வசதியை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPFO) அமைப்பு சமீபத்தில் ஏற்படுத்தியிருந்தது. இது பிஎஃப் உறுப்பினர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், பென்சன் வாங்குவோருக்கு அதிர்ச்சி தரும் வகையில் பிஎஃப் அமைப்பு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதாவது, பென்சன் பெறும் குறிப்பிட்ட சிலரின் மாதாந்திர பென்சன் தொகை நிறுத்தப்பட்டுள்ளது. அதோடு, அவர்களுக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது.
Samayam Tamil pension


இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதலே நிறையப் பேருக்கு பென்சன் தொகை நிறுத்தப்பட்டுள்ளதாகப் புகார்கள் வந்துள்ளன. இதுபற்றிய முன்னறிவிப்பும் அவர்களுக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. பென்சன் உரிமைகளுக்கான சமூக செயற்பாட்டாளரான பிரவீன் கோலி இதுகுறித்து கூறுகையில், தன்னுடைய சேவைக் காலத்தில் அதிக பென்சன் பெறும் வசதிக்கு விண்ணப்பித்ததாகவும், அது ஓய்வூதிய நிதி மேலாளரால் ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும், பென்சன் பங்களிப்பை செலுத்தி வந்ததாகவும் கூறியுள்ளார்.

அதேநேரம், அவரது மாதாந்திர பென்சன் தொகை ரூ.30,592 பெறுவதற்கான பிபிஓ நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் அவருக்கு ரூ.2,372 மட்டுமே பென்சன் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது தனது உரிமைகளுக்கு எதிரானது எனவும், நம்பிக்கையை உடைப்பதாக இருப்பதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

மூத்த பத்திரிகையாளரான நீலம் குபதாவுக்கும் இதே நிலை ஏற்பட்டுள்ளது. 2013 பிப்ரவரி மாதத்தில் ஓய்வு பெற்ற இவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவரது பென்சன் தொகையும் ஜனவரி மாதம் முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து நீலம் குப்தா கூறுகையில், “நாங்கள் வேலை பார்த்த சமயத்தில் அதிக பென்சன் பெறும் வசதி குறித்து எங்களிடம் கேட்கவில்லை. 2016ஆம் ஆண்டில் இது தொடர்பான ஒரு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பின்னரே அதிக பென்சன் பெறும் வசதிக்கு அனுமதி கிடைத்தது. அதன் பின்னரே நான் விண்ணப்பித்தேன்” என்றார்.

நீலம் யாதவுடைய மாதாந்திர பென்சன் தொகை ரூ.9,408 என்பது ஜனவரி மாதம் முதல் நிறுத்தப்ப்ட்டுள்ளது. உங்களுடைய ஓய்வுக்குப் பின்னரே அதிக பென்சன் வசதிக்கு விண்ணப்பித்ததால் அதைப் பெறும் தகுதி இல்லை எனவும், அதிகபட்சம் ரூ.6500 வரை மட்டுமே பென்சன் பெறமுடியும் எனவும் பிஎஃப் அமைப்பு சார்பாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுபோல நிறையப் பேருக்கு பென்சன் தொகை நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜனவரி மாதம் கூடுதல் பென்சன் பெறுவதற்கான அறிக்கை வந்த பிறகு இவர்களுக்கான பென்சன் தொகையில் மாற்றம் வந்துள்ளதாக பிஎஃப் அமைப்பு கூறுகிறது. தற்காலிகமாகவே இவர்களுடைய பென்சன் நிறுத்தப்படுவதாகவும், எதிர்காலத்தில் விதிமுறைகளுக்கு ஏற்ப பென்சன் தொகை வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்