ஆப்நகரம்

இயல்பு நிலைக்குத் திரும்பிய பெட்ரோல் விற்பனை!

ஊரடங்கு காலத்தில் முடங்கிய பெட்ரோலியப் பொருட்கள் பயன்பாடு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 2 Jul 2020, 3:57 pm
இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்கு உள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டதோடு, பொதுப் போக்குவரத்துச் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. மக்கள் நடமாட்டமும் வாகனப் போக்குவரத்தும் குறைந்ததால் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் - டீசல் விற்பனை முடங்கியது. அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களுக்கான அனுமதி இல்லாததால் பெட்ரோலியப் பொருட்களுக்கான தேவை குறையத் தொடங்கியது. இந்நிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் பெட்ரோலியப் பொருட்களுக்கான தேவை படிப்படியாக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Samayam Tamil petrol


இதுகுறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த ஆண்டின் மார்ச் மாதத்தின் கடைசி வாரம் மற்றும் ஏப்ரல் மாதத்தில் பெட்ரோலியப் பொருட்களின் பயன்பாடு கடுமையாகக் குறைந்த நிலையில், ஊரடங்குக்கு முந்தைய அளவுக்கு ஜூன் மாத விற்பனை திரும்பியுள்ளது. ஜூன் மாதத்தில் இந்தியன் ஆயில் கார்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் பெட்ரோலியப் பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கால் ஜிஎஸ்டி வசூலில் பாதிப்பு!

உலகில் பெட்ரோலியத்தை அதிக அளவில் பயன்படுத்தும் மூன்றாவது மிகப்பெரிய நாடாக இந்தியா உள்ளது. கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் 2007ஆம் ஆண்டுக்குப் பிறகு, பெட்ரோலியப் பொருட்கள் விற்பனை கடுமையாகச் சரிந்துள்ளது. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் தொழில் துறை நடவடிக்கைகள் மற்றும் மக்களுக்கான பொதுப் போக்குவரத்தும் தொடங்கியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் பெட்ரோலியப் பொருட்கள் பயன்பாடு 13.4 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்தது. இந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் பெட்ரோலியப் பொருட்கள் பயன்பாடு 11.8 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்துள்ளது. இதன் மூலம் அனைத்துப் பிரிவு பொருளாதார நடவடிக்கைகளிலும் போக்குவரத்து நடவடிக்கைகளும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிகிறது.

சீன ஆப்களுக்கு தடை... தமிழக நிறுவனங்களுக்கு வாய்ப்பு: எஸ்.பி.வேலுமணி

டீசல் பயன்பாடு 2020 ஏப்ரல் மாதத்தில் இருந்த அளவைவிட ஜூன் மாதத்தில் 96 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது, ஏப்ரல் மாதத்தில் 2.8 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்த டீசல் பயன்பாடு, ஜூன் மாதத்தில் 5.5 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. அதேபோல, சமையல் எரிவாயுவுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2019 ஜூன் மாதத்தை விட 2020 ஜூன் மாதத்தில் 16.6 சதவீதம் அதிகரித்துள்ளது.
உள்நாட்டு விமான சேவைகளுக்கு அனுமதி மற்றும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ், சர்வதேச நாடுகளிலிருந்து பயணிகளை அழைத்து வருவதற்கான விமானங்களை இயக்கியது ஆகியவற்றின் மூலம் விமான எரிபொருளின் பயன்பாடு ஜூன் மாதத்தில் 4 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்