ஆப்நகரம்

Digital Rupee: இனி நாமும் டிஜிட்டல் ரூபாய் பயன்படுத்தலாம்.. ரிசர்வ் வங்கி சூப்பர் அறிவிப்பு!

டிசம்பர் 1ஆம் தேதி முதல் சில்லறை பரிவர்த்தனைகளுக்கு டிஜிட்டல் ரூபாய் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 29 Nov 2022, 5:02 pm
டிசம்பர் 1ஆம் தேதி முதல் சில்லறை பரிவர்த்தனைகளுக்காக சோதனை அடிப்படையில் இ-ரூபாய் (e-Rupee) டிஜிட்டல் நாணயம் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Samayam Tamil Digital rupee
Digital rupee


கடந்த நவம்பர் 1ஆம் தேதி ரிசர்வ் வங்கி முதல்முறையாக டிஜிட்டல் ரூபாய் நாணயத்தை அறிமுகப்படுத்தியது. இந்த டிஜிட்டல் ரூபாய் நாணயம் முழுக்க முழுக்க ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறைகளுக்கு கீழே வரும். டிஜிட்டல் ரூபாயை பயன்படுத்துவது முற்றிலும் சட்ட ரீதியானது. இந்திய அரசும் டிஜிட்டல் ரூபாயை ஏற்கும்.

டிஜிட்டல் ரூபாய் நாணயம் முதற்கட்டமாக நவம்பர் 1ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டபோது, மொத்த பரிவர்த்தனைகளுக்கு (பெரிய பரிவர்த்தனைகளுக்கு) மட்டும் கொண்டுவரப்பட்டது. அப்போது எஸ்பிஐ, எச்டிஎஃப்சி வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ பேங்க், கோட்டக் மஹிந்த்ரா பேங்க், யெஸ் பேங்க், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க், எச்எஸ்பிசி ஆகிய ஒன்பது வங்கிகள் டிஜிட்டல் ரூபாய் பரிவர்த்தனைகளை அரசு பத்திரங்களை வர்த்தகம் செய்வதற்கு ரிசர்வ் வங்கி அனுமதித்தது.

இந்நிலையில், டிசம்பர் 1ஆம் தேதி முதல் சில்லறை பரிவர்த்தனைகளுக்கும் டிஜிட்டல் ரூபாய் சோதனை முறையில் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் மட்டும், வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அடங்கிய குழுக்களிடம் டிஜிட்டல் ரூபாய் சில்லறை பரிவர்த்தனைகளுக்கு சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு இனி இந்த சேவை கிடையாது.. இந்த பேங்க்ல உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கா?
ஒரு நபர் மற்றொரு நபருக்கும், ஒரு நபர் ஒரு வர்த்தகருக்கும் என இரண்டு வகையான பரிவர்த்தனைகளும் சோதனை செய்யப்பட இருக்கின்றன. டிஜிட்டல் வாலட்டுகள் வழியாக டிஜிட்டல் ரூபாயை பரிவர்த்தனை செய்யலாம். வர்த்தகர்களிடம் கட்டணம் செலுத்த QR code பயன்படுத்தப்படும்.

இந்த சோதனையில் கிடைக்கும் படிப்பினைகளின் அடிப்படையில் டிஜிட்டல் ரூபாய் மேம்படுத்தப்படும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. டிஜிட்டல் ரூபாய் என்பது ரொக்கத்தை போலவே பாதுகாப்பானதும், நம்பத்தகுந்ததும் ஆகும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் ரூபாய் என்றால் என்ன?


ரிசர்வ் வங்கி நிஜமான ரூபாய் நோட்டுகளை விநியோகிக்கிறது. இந்த ரூபாய் நோட்டுகள் சட்டமுறை பணமாக பயன்படுத்தப்படுகின்றன. இதற்கான அங்கீகாரத்தை ரிசர்வ் வங்கி கொடுக்கிறது. இதேபோல, டிஜிட்டல் நாணயத்தையும் ரிசர்வ் வங்கியே வெளியிடுகிறது. டிஜிட்டல் முறையில் வெளியிட்டாலும் ரிசர்வ் வங்கியின் பேலன்ஸ் ஷீட்டில் டிஜிட்டல் ரூபாய்க்கு இடம் உண்டு.

டிஜிட்டல் ரூபாயின் பயன்கள்

டிஜிட்டல் ரூபாய் பரிவர்த்தனைகள் மிக விரைவாக மேற்கொள்ள முடியும். ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதற்கும், சேமிப்பதற்கும் ஆகும் செலவுகளை குறைக்கலாம். டிஜிட்டல் பரிவர்த்தனைகள் முன்பை விட எளிதாகும். தொழில் பரிவர்த்தனைகள் எளிதாகும். கள்ள நோட்டுகளை கட்டுப்படுத்த உதவும். நிஜ ரூபாய் நோட்டுகள் சேதமடையும்; ஆனால் டிஜிட்டல் ரூபாய்க்கு இந்த பிரச்சினை இல்லை.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்