ஆப்நகரம்

ஜியோவில் கை வைக்கும் கூகுள்: குஷியில் அம்பானி... எத்தனை கோடி தெரியுமா?

ஜியோவில் கூகுள் நிறுவனம் ரூ.33,737 கோடி முதலீடு செய்யவுள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 15 Jul 2020, 7:15 pm
கடந்த சில மாதங்களில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் ஃபேஸ்புக் உள்ளிட்ட பல்வேறு ஜாம்பவான்களும், முதலீட்டாளர்களும் முதலீடுகளை அள்ளிக் குவித்துள்ளனர். இதனால் ரிலையன்ஸ் ஜியோவின் மதிப்பு உயர்ந்தது மட்டுமல்லாமல், அதன் தலைமை நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடனே இல்லாத நிறுவனமாக அறிவிக்கப்பட்டது.
Samayam Tamil ஜியோ


இதைத்தொடர்ந்து, ஜியோவுடன் கூகுள் நிறுவனமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அண்மையில் சில செய்திகள் வெளியாகின. இந்நிலையில், ஜியோவில் 7.7 விழுக்காடு பங்குகளை கூகுள் நிறுவனம் வாங்கவுள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி பல முக்கிய அறிவிப்புகளையும், தகவல்களையும் வெளியிட்டார். அப்போது, ரிலையன்ஸ் ஜியோவில் கூகுள் நிறுவனம் ரூ.33,737 கோடி முதலீடு செய்யவிருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர், “ஜியோவில் முக்கிய முதலீட்டாளராக கூகுளை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம். ஜியோவில் ரூ.33,737 கோடி முதலீட்டில் 7.7 விழுக்காடு பங்குகளை கூகுள் நிறுவனம் கைப்பற்றுவதற்கான ஒப்பந்தத்தில் நாங்கள் கையெழுத்திட்டுள்ளோம். இதன் விளைவாக, கடந்த மூன்று மாதங்களில் மட்டும் ரிலையன்ஸ் ஒட்டுமொத்தமாக ரூ.2,12,809 கோடி முதலீட்டை ஈர்த்துள்ளது” என்று தெரிவித்தார்.

இதில் ஃபேஸ்புக் நிறுவனம் முதலீடு செய்த ரூ.53,124 கோடியும் அடங்கும். கடன் தொகையை அடைத்தபிறகும் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் மிகையாக ரூ.1,61,035 கோடி பணம் இருப்பதாக அம்பானி தெரிவித்துள்ளார். இதனால் உண்மையாகவே கடனில்லா நிறுவனமாக ரிலையன்ஸ் உருமாறியுள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்