ஆப்நகரம்

இந்தியாவுக்கு கஷ்ட காலம்.. குறையும் பொருளாதார வளர்ச்சி!

இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீட்டை சர்வதேச ஆய்வு நிறுவனம் குறைத்துள்ளது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 28 Nov 2022, 4:50 pm
கடந்த சில ஆண்டுகளில் கொரோனா, ஒமைக்ரான் பிரச்சினைகளுக்குப் பிறகு இந்தியா இப்போது வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் இருந்த சமயத்தில் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டது. தொழில் நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன. ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னரும் நிதி நெருக்கடி காரணமாக வழக்கமான உற்பத்தியில் ஈடுபட முடியவில்லை. எனினும் இப்போது கொரோனாவுக்கு முந்தைய இயல்பு நிலையை இந்தியா எட்டியுள்ளது.
Samayam Tamil india


இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்து உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தங்களது மதிப்பீடுகளை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், நடப்பு 2022-23 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடையும் என்று எஸ் & பி குளோபல் ரேட்டிங் நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு குறைக்கப்பட்டிருந்தாலும், சர்வதேச காரணிகளால் இந்தியாவுக்கு மிகப் பெரிய பாதிப்பு இருக்காதென்றும், மற்ற நாடுகளை விட இந்தியா வேகமாக வளரும் என்றும் எஸ் & பி குளோபல் ரேட்டிங்ஸ் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. முன்னதாக செப்டம்பர் மாதத்தில் இந்நிறுவனம் வெளியிட்டிருந்த ஆய்வறிக்கையில், இந்தியா 7.3 சதவீத வளர்ச்சியைக் கொண்டிருக்கும் என்று கூறியிருந்தது. ஆனால் இப்போது அந்த மதிப்பீடு குறைக்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர், இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த ஆய்வறிக்கை மூடிஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது. 2022ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை 7.7 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகக் குறைத்தது. மூடிஸ் நிறுவனத்தின் இந்தப் புதிய மதிப்பீடு, இந்த ஆண்டுக்கான இந்தியாவின் GDP வளர்ச்சி குறித்து கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது.

பொருளாதார வளர்ச்சி.. இந்தியாவுக்கு சறுக்கல்!
ஏனெனில் கடந்த மாதம், சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டிருந்த அறிக்கையில் 2022ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான மதிப்பீட்டை 7.4 சதவீதத்தில் இருந்து 6.8 சதவீதமாகக் குறைத்தது. அதைத் தொடர்ந்து தற்போது பல்வேறு நிறுவனங்கள் அடுத்தடுத்து மதிப்பீடுகளைக் குறைத்து வருவது இந்தியாவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

2016ஆம் ஆண்டில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை பிறகிலிருந்தே இந்தியப் பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கிறது. 2017ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி, 2020ஆம் ஆண்டில் கொரோனா என நிறைய தடைகளையும் சவால்களையும் இந்தியா சந்தித்தது. 2021ஆம் ஆண்டில் கொரோனா இரண்டாம் அலை வீசி மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது. எனினும், இந்த ஆண்டில் இந்தியா மீண்டும் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியது. ஆனால் இப்போது பல்வேறு காரணங்களால் மீண்டும் பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த வளர்ச்சியை மீட்டெடுக்கத் தேவையான நடவடிக்கைகளில் இறங்கி வேண்டிய இக்கட்டான நிலையில் மத்திய அரசு உள்ளது.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்