ஆப்நகரம்

அதானியை நாங்கள் விசாரிக்கவே இல்லை.. குற்றச்சாட்டுகளை மறுத்த செபி!

அதானி குறித்து 2016ஆம் ஆண்டிலேயே விசாரணை நடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகளை செபி மறுத்துள்ளது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 16 May 2023, 2:30 pm
2016ஆம் ஆண்டிலேயே அதானி (Adani) குறித்து விசாரணை நடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகளை பங்கு சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி (SEBI) மறுத்துள்ளது.
Samayam Tamil SEBI
SEBI


அதானி குழுமம் கணக்கு மோசடி உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

அதானி விவகாரம் குறித்து விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றமும் தனிக் குழு அமைத்துள்ளது. மறுபுறம் செபியும் அதானி குறித்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது விசாரணைக்கு இன்னும் ஆறு மாதங்கள் வேண்டும் என செபி கால அவகாசம் கோரியது. நேரமின்மையால் வழக்கு விசாரணையை ஜூலை 10ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதானி குழுமம் குறித்து 2016ஆம் ஆண்டு முதலாகவே செபி விசாரணை நடத்தி வருவதாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இதற்கு ஆதாரமாக, 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சகம் அளித்த பதில் சுட்டிக்காட்டபப்ட்டது.

இதுகுறித்து செபி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2016ஆம் ஆண்டில் அதானி குறித்து விசாரித்ததாக எழுந்த புகார்கள் அடிப்படை உண்மை அல்லாதவை என செபி மறுத்துள்ளது. மேலும், 2020ஆம் ஆண்டில்தான் அதானி குறித்து விசாரணைக்காக வெளிநாட்டு அரசுகளை நாடியதாக செபி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது 51 இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் பணத்தை முதலீடாக கொண்டுவருகின்றனவா என 2016ஆம் ஆண்டில் செபி விசாரித்துள்ளது. இந்த விசாரணையில் அதானி குழுமமும் அடங்கியுள்ளது.

ஆனால், அந்த விசாரணை ஹிண்டன்பர்க் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பானவை அல்ல என செபி தனது பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது. முதன்முதலில் 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அதானி நிறுவனத்தின் பங்குகள் குறித்து விசாரணை நடத்தியதாகவும் செபி விளக்கம் அளித்துள்ளது.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்