ஆப்நகரம்

நூல் விலை உயர்வு.. விசைத்தறி துறையினர் கோரிக்கை!

பருத்தி நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி நாமக்கல் மாவட்டத்தில் விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் போராட்டம் செய்தனர்.

Samayam Tamil 23 May 2022, 6:24 pm
தமிழகத்தில் இப்போது நூல் மற்றும் பஞ்சு விலை உயர்வு பெரும் பிரச்சினையாக எழுந்துள்ளது. திருப்பூர், கோயம்புத்தூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இப்பிரச்சினை பூதாகரமாக எழுந்துள்ளது. இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று தொடர்ந்து போராட்டம் செய்து வருகின்றனர்.
Samayam Tamil yarn price


பருத்தி நூல் விலை கடந்த 6 மாதங்களில் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் இன்று ஒரு நாள் வெண்ணந்தூரில் விசைத்தறி கூடங்களை இயக்காமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பருத்தி நூல் விலை உயர்வைக் கண்டித்து நூலை மாலையாக அணிந்துகொண்டு நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் விசைத்தறி துணி நூல் உற்பத்தியாளர்கள் மனு கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து வெண்ணந்தூர் விசைத்தறி துணி நூல் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் மாதேஸ்வரன் கூறுகையில், “பருத்தியை உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யாமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடாது. பருத்தியை அரசே நேரடியாக கொள்முதல் செய்து உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு செய்தால் பருத்தி விலை குறையும். இத்தொழிலை நம்பி தமிழகம் முழுவதும் 1 கோடி பேர் மறைமுகமாகவும், நேரடியாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றன. அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது. எனவே தங்களது கோரிக்கை அரசு ஏற்க வேண்டும்” என்று வலியுறுத்தினர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்