ஆப்நகரம்

அதானி வழக்கு: செபிக்கு அவ்வளவுதான் லிமிட்டு.. உச்ச நீதிமன்றம் போட்ட உத்தரவு!

அதானி புகார்கள் குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க செபிக்கு மூன்று மாதம் கால அவகாசத்தை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 17 May 2023, 3:05 pm
அதானி மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்த செபிக்கு (SEBI) மூன்று மாதங்கள் கால அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil supreme court
supreme court


அதானி குழுமம் கணக்கு மோசடி உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டது. இதனால் அதானி நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக வீழ்ச்சி அடைந்தன.

அதானி விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதானி மீதான புகார்கள் குறித்து செபி ஒரு பக்கம் விசாரணை நடத்தி வருகிறது. உச்ச நீதிமன்றமும் அதானி மீதான புகார்களை விசாரிக்க தனி விசாரணை குழு அமைத்துள்ளது.

இந்நிலையில், அதானி குழுமம் தொடர்பான பரிவர்த்தனைகள் சிக்கலானதாக இருப்பதால், அவற்றை பற்றி விசாரணை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றத்திடம் செபி ஆறு மாத கால அவகாசம் கேட்டுள்ளது. இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அதானி மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு செபிக்கு மூன்று மாதங்கள் கால அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை அறிக்கையை ஆகஸ்ட் 14ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் எனவும் செபிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையின்போது, அதானி நிறுவனங்களை காப்பாற்றுவதற்கு வெளிப்படையான முயற்சிகள் நடந்து வருவதாக மூத்த வழக்கறிஜர் பிரசாந்த் பூஷன் குற்றம்சாட்டினார். செபி மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் அதானி குறித்த புகார்கள் குவிந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

புகார்கள் இருந்ததையும் தாண்டி அதானி பங்குகள் இரண்டு ஆண்டுகளில் 10,000% உயர்ந்துள்ளன எனவும் அவர் தெரிவித்தார். 2016ஆம் ஆண்டில் அதானி குறித்து நடத்திய விசாரணை பற்றிய தகவல்களை செபி வெளியிடாத வரை எந்த தெளிவும் கிடைக்காது என பிரசாந்த் பூஷன் உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்தார்.

இதையடுத்து, 2016ஆம் ஆண்டு விசாரணை குறித்த விவரங்களை செபி சமர்ப்பிக்க வேண்டும் எனவும், கடந்த இரண்டு மாதங்களில் நடந்த விசாரணையில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பது பற்றிய தகவலையும் செபி சமர்ப்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஏற்கெனவே வழங்கப்பட்ட இரண்டு மாதங்கள், தற்போது மூன்று மாதங்கள் கால அவகாசம் நீட்டிப்பு என விசாரணைக்காக ஐந்து மாதங்கள் செபிக்கு வழங்கப்பட்டுவிட்டது. நீதிமன்றத்தால் அளவில்லா கால நீட்டிப்புகளை வழங்க முடியாது என செபியிடம் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்