ஆப்நகரம்

ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஸ்விகி!

ஸ்விகி நிறுவனம் தனது ஊழியர்களில் 1100 பேரை நீக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Samayam Tamil 18 May 2020, 2:56 pm
கொரோனா கொள்ளை நோய் பரவலை தடுக்க நாடு தழுவிய ஊரடங்கு அமலில் இருப்பதால் ஏராளமான தொழில்துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக, உணவகங்களின் தொழில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகி தனது ஊழியர்களில் 1100 பேரை பணிநீக்கம் செய்துள்ளது.
Samayam Tamil ஸ்விகி ஊழியர்கள் பணிநீக்கம்


இதுகுறித்து ஸ்விகி நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி ஸ்ரீஹர்ஷா மஜெட்டி, “துரதிஷ்டவசமாக அனைத்து மட்டங்களிலும் நாங்கள் எங்களது ஊழியர்களில் 1100 பேரை பிரிய வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. நகரங்களிலும், தலைமை அலுவலகத்திலும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர். எங்கள் நிர்வாகத்தில் நீண்ட காலத்திற்கு ஆலோசித்து எடுக்கப்பட்ட கடினமான முடிவு இதுதான்” என்று தெரிவித்துள்ளார்.

எனினும், இதனால் பாதிக்கப்படும் அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்தது மூன்று மாதத்திற்கு சம்பளம் வழங்கப்படும் என்று ஸ்விகி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய ஸ்ரீஹர்ஷா மஜெட்டி, “எங்களுடன் ஊழியர்கள் வேலை பார்த்த ஒவ்வொரு ஆண்டுக்கும் ஏற்ப நாங்கள் கூடுதலாக ஒரு மாதத்திற்கு தொகை வழங்குவோம். அவர்களின் பணிக்காலத்திற்கு ஏற்ப மூன்று முதல் எட்டு மாதங்களுக்கான ஊதியம் வழங்கப்படும்.

உணவு டெலிவரி தொழிலிலும், டிஜிட்டல் வர்த்தகத்திலும் கொரோனா கொள்ளை நோயின் தாக்கம் நீண்டகாலத்திற்கு இருக்கலாம். இந்த நெருக்கடி எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும் என யாருக்கும் தெரியாது” என்று தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, ஸ்விகியின் போட்டி நிறுவனமான ஜொமாட்டோவும் தனது ஊழியர்களின் 13 விழுக்காட்டினரை நீக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும், ஜொமாட்டோ நிறுவனம் தனது ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. ஜூன் மாதம் முதல் ஜொமாட்டோ ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளது. ஏற்கெனவே குறைவான சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு குறைவாகவே சம்பளம் குறைக்கப்படும். அதிக சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு 50 விழுக்காடு வரை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்