ஆப்நகரம்

இந்தியாவிலேயே அதிக யுபிஐ பரிவர்த்தனை.. தமிழ்நாடு நகரங்கள் முன்னிலை!

இந்தியாவில் அதிக யுபிஐ பரிவர்த்தனைகள் நடைபெறும் நகரங்களில் தமிழக நகரங்கள் முன்னணியில் உள்ளன.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 18 Apr 2023, 1:25 pm
இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகம் நடைபெறும் நகரங்களில் பெங்களூரு முதலிடத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil upi
upi


இந்தியாவில் யுபிஐ (UPI) டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், இந்தியாவிலும், இந்திய நகரங்களிலும் யுபிஐ பரிவர்த்தனைகள் குறித்த விவரங்கள் அடங்கிய அறிக்கையை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பரிவர்த்தனை நிறுவனமான Worldline வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி, 2022ஆம் ஆண்டில் இந்திய நகரங்களில் அதிக டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடைபெற்ற நகரமாக பெங்களூரு முதலிடத்தை பிடித்துள்ளது. 2022ஆம் ஆண்டில் பெங்களூருவில் 6500 கோடி ரூபாய்க்கு 2.9 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.

பெங்களூருவுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் டெல்லி இருக்கிறது. டெல்லியில் 5000 கோடி ரூபாய்க்கு 1.96 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. அடுத்ததாக மும்பை மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மும்பையில் 4950 கோடி ரூபாய்க்கு 1.87 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.

நான்காம் இடத்தில் புனே இருக்கிறது. புனே நகரில் 3280 கோடி ரூபாய்க்கு 1.5 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. ஐந்தாம் இடத்தில் சென்னை இருக்கிறது. சென்னையில் 3550 கோடி ரூபாய்க்கு 1.43 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.

2022ஆம் ஆண்டில் இந்தியாவில் யுபிஐ, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, பிரீபெய்டு பரிவர்த்தனைகள், மொபைல் மற்றும் பிரீபெய்டு கார்டுகள் வாயிலாக மொத்தம் 149.5 லட்சம் கோடி ரூபாய்க்கு டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.

இதில் 126 லட்சம் கோடி ரூபாய்க்கு 74.05 பில்லியன் யுபிஐ பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. முந்தைய ஆண்டை காட்டிலும் இது இருமடங்கு உயர்வாகும். மளிகை கடைகள், உணவகங்கள், துணி கடைகள், மருந்து கடைகள், ஹோட்டல், நகை கடைகள், வீட்டு உபயோக பொருள் ஸ்டோர்கள், டிபார்ட்மெண்டல் ஸ்டோர்கள் ஆகிய இடங்களில் மட்டும் 43% யுபிஐ பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.

ஆன்லைன் தளங்களை பொறுத்தவரை மின்னணு வர்த்தகம் (ஆன்லைன் ஷாப்பிங்), கேமிங், பில் கட்டணம், நிதி சேவைகள் போன்றவற்றுக்கு 85% பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.

அதிக யுபிஐ பரிவர்த்தனைகள் நடைபெற்ற முதல் 10 மாநிலங்களாக கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரப் பிரதேசம், டெல்லி, தெலங்கானா, குஜராத், மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

அதிக யுபிஐ பரிவர்த்தனைகள் நடைபெற்ற முதல் 10 நகரங்களாக பெங்களூரு, டெல்லி, மும்பை, புனே, சென்னை, ஹைதராபாத், எர்ணாகுளம், திருவனந்தபுரம், திருச்சூர், கோயம்புத்தூர் ஆகிய நகரங்கள் உள்ளன.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்