ஆப்நகரம்

நிர்மலாவை சந்தித்த பிடிஆர்.. ஜிஎஸ்டி பணத்தை வழங்க கோரிக்கை!

தமிழகத்துக்கு வரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை விரைந்து வழங்கும்படி மத்திய நிதியமைச்சருக்கு தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கோரிக்கை வைத்துள்ளார்.

Samayam Tamil 1 Oct 2022, 2:53 pm
நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையை அமல்படுத்தும் நோக்கத்தில் கடந்த 2017ஆம் ஆண்டின் ஜூலை மாதம் 1ஆம் தேதி புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டது. இந்த வரி முறையில் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு மத்திய அரசிடமிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு இழப்பீடுகள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு மாநிலங்களும் ஒப்புதல் தெரிவித்தன.
Samayam Tamil PTR nirmala


மாநிலங்களின் ஆண்டு வருவாய் வளர்ச்சி 14 சதவிகிதத்தை விடக் குறைவாக இருந்தால் மத்திய அரசு அதற்கான இழப்பீட்டை வழங்கும். ஆனால், இந்த இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு முறையாக வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா பாதிப்புக்குப் பிறகு மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்காமல் இழுத்தடித்து வருவதாக மத்திய அரசின் மீது கடும் விமர்சனம் எழுந்தது. குறிப்பாக, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் வஞ்சிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு இருந்தது.

இதையடுத்து ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்று தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் அனுப்பியும் நேரில் சந்தித்தும் கோரிக்கை வைத்தனர். இதன் விளைவாக, மாநிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை பல்வேறு தவணைகளாக மத்திய அரசு வழங்கி வருகிறது. ஆனாலும் இழப்பீட்டுத் தொகை இன்னும் கோடிக் கணக்கில் பாக்கி இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டியின் கீழ் பல லட்சம் கோடிகளை மத்திய அரசு வசூல் செய்து வருகிறது.


இந்நிலையில் தமிழகத்துக்கு வரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை விரைந்து வழங்கும்படி தமிழக அரசு சார்பாக மத்திய நிதியமைச்சகத்துக்கு இன்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. டெல்லி சென்றுள்ள தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை இன்று சந்தித்தார். ஜிஎஸ்டி தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்தும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதேபோல, மதுரையில் நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்