ஆப்நகரம்

விவசாயிகளுக்கு அள்ளிக் கொடுக்கும் தமிழக அரசு!

தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்கு அரசு தரப்பிலிருந்து நிறைய உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 13 Aug 2022, 9:29 am
விவசாயிகளுக்கான நலத்திட்ட உதவிகள் குறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
Samayam Tamil farmers


விவசாயிகளுக்குத் தேவையான ரசாயன உரங்களை தமிழகத்தில் உள்ள சுமார் 4,350 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக கூட்டுறவுத் துறை விநியோகம் செய்து வருகிறது. விவசாயிகள் தாங்கள் பெறும் விவசாயக் கடன்கள் மூலமாக உரங்களைப் பெற்று வருகின்றனர்.

நடப்பு குறுவை மற்றும் சம்பா பருவத்தில் உரங்களுக்கான கச்சாப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் இறக்குமதி பற்றாக்குறை ஆகிய நெருக்கடியான சூழல் நிலவி வந்த போதிலும், தமிழ்நாட்டில் 2022 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இதுவரை 62,768 மெட்ரிக் டன் அளவு யூரியா உரம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல் 50,123 மெட்ரிக் டன் டிஏபி உரமும், 23,544 மெட்ரிக் டன் பொட்டாஷ் உரமும், 60,771 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்களும் வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக 1,97,206 மெட்ரிக் டன் அளவு ரசாயன உரங்கள் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இதுநாள் வரையில் 15,463 மெட்ரிக் டன் யூரியா உரமும், 13,134 மெட்ரிக் டன் டிஏபி உரமும், 12,535 மெட்ரிக் டன் பொட்டாஷ் உரமும், 32,669 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரமும் என மொத்தம் 73,801 மெட்ரிக் டன் ரசாயன உரங்கள் இருப்பாக உள்ளது. இதில் யூரியா உள்ளிட்ட அனைத்து உர வகைகளும் தேவைக்கேற்ப வழங்கப்படுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு ஹேப்பி நியூஸ்.. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பயன்பெறுவதற்காக அறிவிக்கப்பட்ட குறுவை சாகுபடி திட்டத்தில் இதுவரை 7,635 மெட்ரிக் டன் யூரியா உரமும், 8,487 மெட்ரிக் டன் டிஏபி உரமும், 4,240 மெட்ரிக் டன் பொட்டாஷ் உரமும் என மொத்தம் 20,362 மெட்ரிக் டன் ரசாயன உரங்கள் விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் விரும்பும் உரங்களைத் தவிர வேறு உரங்கள் மற்றும் இடுபொருட்கள் கொள்முதல் செய்ய கட்டாயப்படுத்தும் சங்க செயலாளர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், விவசாயிகள் இது தொடர்பான புகார்களை மாவட்டத்திலுள்ள கூட்டுறவுத் துறையின் இணைப்பதிவாளருக்குத் தெரிவிக்கலாம் எனவும் ஐ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்